செத்தாலும் அதிமுகவை காட்டிக்கொடுக்க மாட்டேன்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்ணீர் மல்க ஆவேசப் பேச்சு!
வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ள "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" பிரச்சாரப் பயணத்திற்கான ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ராஜேந்திரபாலாஜி மேடையில் கண்ணீர் மல்கப் பேசியது அனைவரையும் உலுக்கியது.
கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜி, பண மோசடி வழக்கில் திமுக அரசு தன்னை கைது செய்து சிறையில் அடைத்திருந்தபோது சந்தித்த இன்னல்களை விவரித்தார்.
அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தரச் சொல்லி மிரட்டினார்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டால் உங்களுக்குத் தேவையானதைச் செய்வோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
என்னை தனிமைச் சிறையில் அடைத்து, மிரட்டி பணிய வைக்க நினைத்தார்கள். ஆனால், நான் எதற்கும் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேன், அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று ஆவேசமாகப் பேசினார்.
மேலும், "சிறைக்குள் சிறை என தனிமைச் சிறையில் இருட்டு அறைக்குள் என்னை அடைத்து வைத்திருந்தார்கள். சிறையில் ஒரு ஊறுகாய் கூட கொடுக்க விடாமல் தடுத்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னை வேட்டையாடியது. எதற்கும் நான் அஞ்சவில்லை" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "கொடுப்பதுதான் எனது வழக்கம், நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை" எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய ராஜேந்திரபாலாஜி, யார் என்ன சொன்னாலும் நான் சிவகாசியில் தான் போட்டியிடுவேன். என்னை இருமுறை அமைச்சராக்கிய சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என சூளுரைத்தார். அவரது உணர்ச்சிபூர்வமான பேச்சு கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.