"நான் கலந்து கொள்ள மாட்டேன்" - பாமக நிறுவனர் ராமதாஸ்!
பாமகவில் நிறுவனர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்தும் தலைமை நிர்வாக குழுவில் இருந்தும் அன்புமணியை நீக்கம் செய்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தான் அறிவித்ததை ஏற்றுக் கொண்டு செயல் தலைவராக அன்புமணி பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் தொண்டராக இருந்து கட்சிக்கு பணியாற்றட்டும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாசிற்கு அதிகாரம் அளித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே சமயம் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை மேடையில் ஏற்றி ராமதாஸ் அமர வைத்தார். பாமகவில் மகன் அன்புமணியை ஓரங்கட்டிவிட்டு தனது மூத்த மகளை ராமதாஸ் முன்னிலைப்படுத்த தொடங்கி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாருக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக கும்பகோணத்தில் நடைபெற்ற மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் இன்று காலை கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியின் பெயருக்கு பின்னால் தனது பெயரை போடக் கூடாது என்று பேசி அதிர வைத்தார்.
இதனை தொடர்ந்து தனது தந்தை ராமதாஸ் வீட்டில் இல்லாத சூழலில் அன்புமணி இன்று இரவு திடீரென தைலாபுரத்தில் உள்ள வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது வீட்டில் இருந்த தனது தாய் சரஸ்வதி அம்மாளை நேரில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து அன்புமணி புறப்பட்டு சென்றார்.
ராமதாஸ் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அன்புமணி வீட்டிற்கு வந்து தனது தாயாரை நேரில் சந்தித்து பேசி விட்டு சென்றுள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று விருதாசலத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் விழுப்புரத்தில் வருகின்ற 20ஆம் தேதி வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீட்டை தர மறுக்கும் திமுக அரசை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.