”வெற்று வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” - யூடியூபரை விளாசி நடிகை கௌரி கிஷன் பதிவு..!
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அதர்ஸ்’. இப்படத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், ’96’ பட நடிகை கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் யூடியூபர் ஒருவர் கதாநாயகனிடம், “படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக மற்றொரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் “இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல”என பேசியிருந்தார்.
இந்த சூழலில், கடந்த 5ம் தேதி நடைபெற்ற ‘அதர்ஸ்’ பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை யூடியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது. இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன், “உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலி செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் கேட்டாலும், அது என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி, எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன்” என பதில் அளித்தார்.
இருப்பினும், நடிகை கௌரி கிஷனை பேசவிடாமல் மாறி மாறி சத்தம் எழுப்பியதால் நடிகை கௌரி கிஷன் “செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் கூட இல்லாத நிலையில் இந்த தரமற்ற செயலுக்கு யாரும் கேள்வி எழுப்பமாட்டுகிறீர்கள்” என்றார். பின்னர், நடிகை கௌரி கிஷன் செய்தியாளர் சந்திப்பு முடிந்து மௌனமாக புறப்பட்டு சென்றார்.
இதனையடுத்து, நடிகை கௌரி கிஷனுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட யூடியூபருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கௌரி கிஷனின் உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,”நான் அவரை உருவ கேலி செய்யவில்லை. ஜாலியாக கேட்ட கேள்வி, தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அவரின் மனதை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இதனால் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை கௌரி கிஷன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”அது ஒரு வேடிக்கையான கேள்வி, அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது, இப்படி பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது மன்னிப்பு அல்ல. வருத்தத்தையோ அல்லது வெற்று வார்த்தைகளையோ நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.