‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரமை பார்த்து பயந்துவிட்டேன்: பா.ரஞ்சித் நெகிழ்ச்சி!
’தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரமின் கடின உழைப்பையும், அவரின் ஈடுபாட்டையும் கண்டேன். அவரது ஒத்துழைப்பை நினைத்தால் பயமாக இருக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான். பா.ரஞ்சித்தின் தனது ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் விக்ரம் குணமாகிய நிலையில் படப்படிப்பு சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் தங்கலான் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட் திட்டமிட்ட தொகையைத் தாண்டி ரூ.100 கோடிக்கும் மேல் செலவானதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாவது,
“அனைவரும் கஷ்டப்பட்டு தான் உழைக்கிறோம். ஆனால், ஒரு கலைஞனாக நாம் கொடுக்கும் ஈடுபாடு முக்கியம். விக்ரம் சாரிடம் படப்பிடிப்பில் அந்தக் கடின உழைப்பையும் அவரின் ஈடுபாட்டையும் கண்டேன். திரைத்துறையில் இத்தனை ஆண்டுகள் இருந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் ஆச்சரியத்தைத் தருகிறது. விலா எழும்பு உடைந்த பின்பும், அவர் சண்டைக் காட்சிகளில் ஆர்வத்தைக் காட்டினார். உண்மையில், விக்ரமின் ஒத்துழைப்பை நினைத்தால் பயமாக இருக்கிறது. தங்கலான் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்” எனக் கூறியுள்ளார்.