“எனது புத்தகங்களும், பையும் எரிந்துவிடுமோ என்று பயந்துவிட்டேன்”... புத்தகத்தை இறுகபிடித்து ஓடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுமி!
உத்தரப்பிரதேசத்தின் அம்பேத் நகரில் மார்ச் 21ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். அப்போது அனன்யா யாதவ் என்ற 8 வயது சிறுமியின் குடிசைக்கு அருகில் இருந்த கொட்டகை தீப்பிடித்துள்ளது. எங்கு அந்த தீ தன்னுடைய பள்ளிப்பை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கும் பரவி, தனது புத்தகங்கள் எரிந்துவிடுமோ என்ற அச்சத்தில், அந்த 8 வயது சிறுமி அதனை காப்பாற்ற விரைந்தாள்.
அவர் புத்தகங்களை தன் நெஞ்சில் இறுக பிடித்துக் கொண்டு ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி இந்திய உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை பெற்றுள்ளது. செவ்வாய்கிழமையன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு ஒரு வழக்கு விசாரணையில், இந்த வீடியோ ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நீதிபதி புயான் கூறுகையில், “சமீபத்தில் புல்டோசர்களால் சிறிய குடிசைகள் இடிக்கப்படும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இடிக்கப்பட்ட ஒரு குடிசையிலிருந்து ஒரு சிறுமி கையில் புத்தகங்களுடன் ஓடி வருவது ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது” என்றார்.
இதுகுறித்து அனன்யா கூறுகையில்,
“நான் பள்ளியிலிருந்து திரும்பி வந்து என் பையை கொட்டகையில் வைத்தேன். அங்கு என் அம்மா ஆடு, மாடுகளை கட்டியிருந்தார். (இடிப்பின் போது), எங்கள் பக்கத்து கொட்டகையில் தீப்பிடித்தது. உடனடியாக என் பள்ளிப் பை மற்றும் புத்தகங்களைப் பற்றி நினைத்தேன். என் அம்மா என்னைத் தடுக்க முயன்றார், ஆனால் நான் அவர்கள் கையை தட்டிவிட்டு ஓடி புத்தகங்களை எடுத்து வந்தேன். எனது புத்தகங்களும், பையும் எரிந்துவிடுமோ என்று பயந்துவிட்டேன்” என அரசு தொடக்கப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் அனன்யா தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.