”தங்கலான் போன்ற படத்தை எடுக்க தில் இருக்கணும்” - நடிகர் விக்ரம்!
“தங்கலான் போன்ற படத்தினை எடுக்க வேண்டும் என்றால், அதற்கு தில் இருக்கணும்” என நடிகர் விக்ரம் பேசியுள்ளார்.
விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா மோகனன், பார்வதி உட்பட திரைப்படக்குழுவினர் பலர் கலந்துகொண்டார்.
அப்போது மாளவிகா மோகனன் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
“மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும். கறித்தோசை, ஜிகர்தண்டா என இங்குள்ள உணவுகள் பல பிடிக்கும். இந்தியாவிலயே மதுரையில் தான் உணவு சிறப்பாக உள்ளது. தங்கலான் பட சூட்டிங் தொடக்கம் மற்றும் முடிவு இரண்டுமே இங்கு தான் நடந்தது. எனது சிறப்பான இடமாக மதுரை அமைந்துள்ளது. விரைவில் நான் தமிழில் சரளமாக பேசுவேன்.
பல்வேறு இடங்களில் சூட்டிங் நடைபெற்றாலும், மதுரை எப்போதும் தனி ஸ்பெசல் தான்.
பலமுறை சொல்வேன் விக்ரம் சிறந்த நடிகர். தங்கலானில் ஸ்கீரினில் சிறப்பாக சண்டை
போடுவார். ஆனால் ஆப் ஸ்கீரினில் நல்ல நண்பர். இந்த படத்தில் நடித்த ஆங்கில நடிகர் டேனி புதிய இடம், புதிய கலாச்சாரத்தோடு சேர்ந்துவிட்டார். இவர் அதிகளவு இந்திய படங்களில் நடிக்க வேண்டும். மதுரைக்கு வர வேண்டும். கறிதோசை சாப்பிட வேண்டும்,. இந்த படத்திற்காக பா.ரஞ்சித்க்கு மிக்க நன்றி.
நடிகர் விக்ரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
“மதுரை எனக்கு ஸ்பெசலான இடம். விடுமுறை என்றாலே எனக்கு மதுரை தான் நினைவுக்கு வரும். அனைத்து விடுமுறையிலும் இங்கு தான் இருப்பேன். மதுரை என்றாலே கோயில், அழகர்கோவில் பாட்டு, கழுதைகள் என அனைத்தும் நினைவுக்கு வரும்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் இறங்கி வேலை செய்ய வேண்டும். இந்த படத்தில் டேனிக்கு அதிகளவு காயம் ஏற்பட்டது. அதன்பின் ஆப்ரேசன் செய்து 3 மாதம் ரெஸ்ட் எடுத்தார். பின்னர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். படத்துக்காக உயிரை கொடுத்து நடித்தார். மாளவிகா யார் என்பது இந்த படம் மூலம் தெரியவரும். ஆக்ஷன் சீன் முழுவதும் மாளவிகா என்னோடு சிறப்பாக நடித்தார். இதேபோன்று பார்வதியும் இந்த படத்தில் ரொம்ப ஆர்வமாக பணிபுரிந்தார்.
தங்கலான் போன்ற படத்தினை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு தில் இருக்கணும். அந்த தில் இருந்ததால் தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த படத்தை தூளாக தயாரித்துள்ளார். தங்கலான் இந்தியன் சினிமாவிற்கு புதுவிதமான கதையாக இருக்கும். இந்த படம் வாழ்க்கையை பார்த்தது போல இருக்கும். பா.ரஞ்சித்தோடு பணி புரிந்ததில் மகிழ்ச்சி. எனக்கு பிடித்த இயக்குநர். தங்கலான் படத்தில் உலக சினிமா தரமும், நமது மண்வாசனையும் இருக்கும். இந்த படக்குழுவில் பணியாற்றிய லாஸ்ட் லைட்மேன்வரை அனைவருக்கும் நன்றி.
எந்த படம் நடித்தாலும் அதற்கு ஏற்ப மனரீதியாக என்னை தயார் படுத்திக்கொள்வேன். காதல் கதை தொடர்பான படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என்றார்.