“என் மனைவியை பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்” - 90 மணி நேர வேலை குறித்த கருத்துக்கு ஆனந்த் மஹிந்திரா பதிலடி!
லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் உரையாடல் ஒன்றின்போது, “எல்&டி நிறுவனம், அதன் ஊழியர்களை ஏன் சனிக்கிழமைகளிலும் வேலை செய்ய வைக்கிறது” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அவர், “நீங்கள் வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்?, எவ்வளவு நேரம் உங்கள் மனைவியின் முகத்தை பார்ப்பீர்கள், அவர் எவ்வளவு நேரம் உங்கள் முகத்தை பார்ப்பார்?. சொல்லப்போனால் ஞாயிற்றுகிழமை உங்களால் வேலை செய்ய முடியாமல் போனதை நினைத்து வருத்தப்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமையும் உங்களை வேலை செய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனெனில் நான் ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்கிறேன்.
L&T Chairman says “ he regrets he’s not able to make us work on Sunday and Sunday’s, 90hrs a week” in a response to his employee remarks
by inIndiaCareers
சமீபத்தில் சீன நபர் ஒருவருடன் நான் பேசினேன். அவர் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்றார். அதற்கு காரணம் அமெரிக்காவில் 50 மணி நேரம் வேலை செய்யும் நிலையில், சீனர்கள் 90 மணி நேரம் வாரத்திற்கு வேலை செய்கிறார்கள். வீட்டில் குறைவான நேரத்தை செலவிட்டு அலுவலகத்தில் அதிக நேரத்தை செலவிடுங்கள்” என தெரிவித்தார்.
இவரின் பேச்சு இணையத்தில் பெரும் விவாதத்தையே தூண்டியது. இந்தியாவில் சராசரி மனிதனின் வார வேலைநேரம் 48 மணிநேரமாக உள்ளது. ஒரு நாளில் 8 மணி நேர வேலையின்போதே, பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியிருக்கையில் இதை உயர்த்தினால் அதனால் பாதிப்புகள்தான் அதிகரிக்கும் என்பது பெரும்பாலோனோரின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் சுப்பிரமணியன் கருத்துக்கு பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பதிலடி கொடுத்துள்ளார். நேற்று (ஜன. 11) ஒரு ஊடக நிகழ்வில் பேசிய மஹிந்திரா,
“நான் சமூக ஊடகத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறேன் என்று பலர் கேட்கின்றனர். நான் எக்ஸ் தளத்தில் நேரம் செலவிடுகிறேன். ஆனால் அது நான் தனிமையில் இருப்பதால் அல்ல. எனது மனைவி அற்புதமானவர், அவரை பார்த்துக்கொண்டே இருப்பதை நான் விரும்புகிறேன். எனவே நான் நண்பர்களை உருவாக்க சமூக ஊடகங்களை பயன்படுத்தவில்லை, தொழில் நிமித்தமாகவே அதை ஒரு கருவியாக பயன்படுத்துகிறேன்.
90 மணிநேர வேலை விவாதம் தவறானது. வேலை நேரத்தின் அளவை விட, வேலையின் தரத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். நாராயண மூர்த்தி மற்றும் பிறர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே இதை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஆனால் இந்த விவாதம் தவறான திசையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். 10 மணிநேரம் ஆனாலும் என்ன அவுட்புட் செய்கிறாய்? என்பது முக்கியம். 10 மணி நேரத்தில் உலகையே மாற்றிவிடலாம்.
பல நாடுகள் வாரம் 4 நாள் வேலையை பரிசோதித்து வருகின்றன. படிக்கவும், சிந்திக்கவும் நேரம் தேவை. நீங்கள் வீட்டில் நேரத்தை செலவிடாமல், படிக்காமல், நண்பர்களுடன் நேரத்தை செலவிடாமல் அது சாத்தியமில்லை. நீங்கள் ஒரு காரை உருவாக்குங்கள். ஒரு காரில் ஒரு வாடிக்கையாளர் என்ன விரும்புகிறார் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.
நாங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் எப்போதும் அலுவலகத்தில் இருந்தால், மற்ற குடும்பங்கள் என்ன வகையான காரில் உட்கார விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் எப்படி புரிந்துகொள்ள முடியும்? என தெரிவித்தார். மேலும், உங்கள் ஜன்னல்களைத் திறந்து காற்றை உள்ளே விடுங்கள். நீங்கள் எப்போதும் சுரங்கப்பாதையில் இருக்க முடியாது என காந்தியின் கூற்றை மேற்கோள் காட்டினார்.