“கருணாநிதியை புரிந்துகொண்டேன்; முதலமைச்சர் ஸ்டாலினை புரிந்துகொள்ள முடியவில்லை” - அமைச்சர் துரைமுருகன்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டியில் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக அரசு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
“திமுக அரசின் சாதனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், முதலில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். திமுக ஏன் இருக்க வேண்டும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒன்று உள்ளது. மோடி பிரதமராக உள்ளார். அவருக்கு பக்கத்தில் அமைச்சர்களும் உள்ளனர். அவர்களுக்கு என்ன வேலை திட்டம் போட வேண்டும், பணம் தர வேண்டும், நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு வேண்டிய திட்டங்களை தர வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு சலாம் செலுத்துபவர் அங்கு முதலமைச்சராக இருக்க வேண்டும். சலாம் சொல்லாதவரை தூக்கி எறிய வேண்டும் என்பதனை செய்கின்றனர். எதற்காக இந்த நாட்டில் இரண்டு கலாச்சாரங்கள் இருக்கிறது. ஒன்று வடநாட்டில் இருக்கக்கூடிய கலாச்சாரம் அது நமக்கு அசிங்கமான ஒன்று. நாம் பண்பாடும் மிக்கவர்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒரு அமைச்சர் நம்மைப் பார்த்து நாகரீகமற்றவர்கள் என்று சொல்கிறார்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்னே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்று சொல்வார்கள். எங்கள் மன்னர்கள் இந்தியாவின் இமயத்திலேயே கொடி போட்டு இருக்கிறார் சேரன் செங்குட்டுவன். ஒரு முறை கங்கை வரை ராஜேந்திர சோழன் படை எடுத்து வெற்றி கொண்டார். கங்கைகொண்டான் என்ற பெயர் பெற்றதால் கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கினார்.
இது பற்றி தமிழ் புலவர் ஒரு முறை வடநாட்டில் சொன்னபோது, அங்குள்ள மன்னர் ஒருவர் என்போல் மன்னவர் ஒருவர் இல்லை என்று சொன்னார். செங்குட்டுவன் படையெடுத்து அந்த மன்னரை வெற்றி கொண்டு, அங்கு இருந்த ஒரு பாறையை எடுத்து கண்ணகிக்கு சிலை எடுக்க கொண்டு வந்தவன். இது நாங்கள் பெற்ற நாகரீகம். கிறிஸ்து பிறப்புக்கு முன்னரே மற்ற நாடுகளில் தமிழர்கள் வணிகம் செய்த வரலாறு உண்டு. தமிழர்கள் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே நாகரீகம் படைத்தவர்கள்.
வட மாநிலத்தவர் யாரும் குளிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் தமிழர்கள் ஒரு
வேளைக்கு இரண்டு வேலை குளிப்பார்கள். அப்படிப்பட்ட பிறவி நீங்கள். நாடாளுமன்றத்தில் நின்று தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறுகின்றனர். நாகரீகம் என்றால் என்னவென்று தெரியுமா?. அதற்கு இலக்கணம் உண்டா, இலக்கியம் உண்டா?. நம் ஆட்சியை கைப்பற்றுவது அவர்கள் நோக்கம் கிடையாது. தமிழ் கலாச்சாரத்தை அழிப்பது, தமிழர்கள் என்ற உணர்வை மங்க வைப்பது, பெரியாரை சமூக விரோதியாக காட்டுவது, அண்ணாவை சாதாரண மனிதனாக காட்டுவது.
இந்த நாட்டில் அண்ணா இல்லை, கருணாநிதி இல்லை, எம்ஜிஆர் இல்லை இப்படிப்பட்ட பெருந்தலைவர்கள் இல்லை. இந்த நேரத்தில் தமிழகத்தில் ஒரு சின்னப் பையன் ஒற்றை உருவம். அவனால் எதிர் கொள்ள முடியாது என்று பேசி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது முத்துவேல் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் ஒற்றை நாடி உருவம் தான். ஆனால் வைரம் பாய்ந்த நெஞ்சம்.
நான் கருணாநிதியோடு 55 ஆண்டுகள் அவரோட மடியில் இருந்தவன். அதனால் அவருடைய குணங்கள் தெரியும், அவருடைய வீரம், விவேகம் எனக்கு தெரியும். அவரை நாங்கள் சில நேரங்களில் கலாட்டா செய்து விடுவோம். அதை அவரும் ஏற்றுக்கொள்வார். ஆனால் அவரை புரிந்துகொள்ள முடிந்த எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புரிந்துகொள்ள முடியவில்லை.
சில நேரங்களில் என்னை மயக்குகிறார். அண்ணா, கருணாநிதி இரண்டு பேரையும் ஊறவைத்து அரைத்து வைத்து உருவம் செய்தால் அதுதான் மு.க ஸ்டாலின். அவரை சின்னப் பையன் என்று சொல்லக்கூடாது. கரிகால பெருவளத்தானை அப்படித்தான் சின்ன பையன் என்று சொல்லுவார்கள், ஏழு மன்னர்களை வெற்றி கொண்டான். அதேபோன்றுதான் மு.க. ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்திலும் வெற்றிதான்” என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.