“எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்த அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன்” - கொதித்தெழுந்த தவெக தலைவர் விஜய்!
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு, தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “'அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என கூறுவதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தாலாவது ஏழு ஜென்மத்திற்கும் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” எனக் கூறினார்.
இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயர் பதிக்கப்பட்ட பலகையை அணிந்தும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
“யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை உள்ளமும், உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த மத்திய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.