“இந்திரா காந்தியை நான் இந்தியாவின் தாயாக பார்க்கிறேன்!”- மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி புகழாரம்!
மத்திய இணை அமைச்சரும் கேரளாவின் முதல் பாஜக எம்பியுமான நடிகர் சுரேஷ் கோபி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, இந்தியாவின் தாய் என பாராட்டியுள்ளார்.
கேரள மாநிலம் புங்குன்னத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாகரனின் நினைவுச் சின்னமான முரளி மந்திரத்தை சுரேஷ் கோபி பார்வையிட்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் தாய்.
கருணாகரன் திறமையான நிர்வாகி, அவரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் நாயனாரும் எனது அரசியல் குருமார்கள் ஆவார். எனது வருகையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். எனது குருவுக்கு மரியாதை செலுத்தவே நான் இங்கு வந்துள்ளேன்.
நாயனார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ள உறவை போல் கருணாகரனின் குடும்பத்தினருடனும் எனக்கு நல்ல நட்பு, உறவு உள்ளது. கருணாகரன் கேரள காங்கிரஸின் தந்தையாக இருந்தார் என சுரேஷ் கோபி தெரிவித்திருந்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் கேரளாவில் பாஜகவின் முதல் எம்பி என்ற பெருமையை பெற்றார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருணாகரனின் மகன் முரளிதரன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வி.எஸ். சுனில் குமாரும் தோல்வி அடைந்தார். சுரேஷ் கோபி சுனில் குமாரை 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
இந்த வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக சுரேஷ் கோபிக்கு மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் பதவியை பாஜக வழங்கியுள்ளது. முன்னதாக தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், தான் எம்பியாக இருந்து மக்கள் சேவையாற்றவே விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சுரேஷ் கோபி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக செய்திகள் வந்ததை அடுத்து பதவியிலிருந்து விலகுவதாக நான் அறிவிக்கவில்லை என மறுப்பும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக எம்.பியாக இருப்பதோடு, அமைச்சர் பதவியையும் வகித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தியை புகழ்ந்து பேசியது கேரள பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.