For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எனக்கு மக்களைப் பற்றித் தான் நினைப்பு... அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

12:10 PM Jan 12, 2024 IST | Web Editor
எனக்கு மக்களைப் பற்றித் தான் நினைப்பு    அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

எனக்கு மக்களைப் பற்றித் தான் நினைப்பே தவிர என்னைப் பற்றி இல்லை என அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Advertisement

‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்றும் இன்றும்  நடைபெற்றது.  இந்த விழாவினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் இலங்கை,  மலேசியா,  ஆஸ்திரேலியா,  சிங்கப்பூர்,  துபாய்,  இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர்,  அமைச்சர்கள், கவிஞர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

விழாவின் முதல் நாளான நேற்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,  கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்பு தலைப்பின் கீழ் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.  இதன் பின்னர் ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தை துவக்கி வைத்த அவர்  பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய 13 அயலக தமிழர்களுக்கு கனியன் பூங்குன்றனார் விருது வழங்கி கௌரவித்தார்.  மேலும்  அவர்களுக்கு 40 கிராம் மதிப்பிலான தங்கப் பதக்கம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

” எல்லாம் நல்லா இருக்கீங்களா,  மகிழ்ச்சியாக இருக்கீங்களா..

ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடுகளுக்கு வரும் போது எப்படி பிரமாண்டமாக வரவேற்பு கொடுப்பீர்களோ, அது போல நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 வது முறையாக உங்களை தமிழ்நாட்டிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி.

எனக்கு உடல் நலம் சரியில்ல. உற்சாகமாக இல்லை என நேற்று ஒரு பத்திரிக்கையில் எழுதி இருந்தனர்.  அதை படிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. எனக்கு என்ன குறை..? தமிழ்நாட்டு மக்கள் உற்சாகமாக இருக்கும் போது எனக்கு என்ன குறை.  எனக்கு மக்களை பற்றித் தான் நினைப்பே தவிர என்னை பற்றி இல்லை.  மக்களுடன் இருப்பவன் நான்.  என் சக்தியை மீறி உழைப்பவன்.  நான் இன்று உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்கள் கொண்டாடும் மாநாட்டில் பங்கேற்றுள்ளேன்.

Imageஒரே மாதத்தில் பொங்கலுக்கு ரூ.1000,  மகளிர் உரிமை தொகை ரூ.1000 ,  மிக்ஜாம் புயல் நிவாரணம் ரூ6000 என மொத்தமாக ரூ.8000 பெற்ற சகோதரிகள் மிக்க மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள் நீங்கள்.  அயலக தமிழகர்களுக்கென தனித் துறை மற்றும் அமைச்சரை நியமித்து உங்களது அவசர தேவைகளை நிவர்த்து செய்து வருகிறது தமிழ்நாடு அரசு.  வெளிநாட்டில் கைது செய்யப்படும் தமிழர்களுக்கு உரிய சட்ட உதவி வழங்கப்படுகிறது

மருத்துவ இயலாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாயகம் செல்ல முடியாமல் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் உடலை கொண்டு வர ஒரு கோடி ரூபாய் சுழல் நிதி பயன்படுத்தப்படுகிறது.  தமிழர்களை பிற இடங்களில் இடர்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டுள்ளோம்.  தாய் தமிழ்நாட்டின் முதல்வராக மட்டும் இல்லாமல் ஒரு தமிழனாகவும் இந்த விழாவை நினைத்து மகிழ்கிறேன்.  நாம் அனைவரும் தமிழ் அன்னையும் குழந்தைகள்.  எங்கு வாழ்ந்தாலும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வாருங்கள். குழந்தைகளோடு கீழடிக்கு அழைத்து வாருங்கள்.  அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags :
Advertisement