"நான் வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும்" - பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த நபருக்கு 'தியாகி' அந்தஸ்து வழங்க மனைவி கோரிக்கை!
ராஜஸ்தான் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் 31 வயதான சுபம் திவேதி. தொழிலதிபரான இவர் இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி அஷான்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் சுபம் திவேதியும் ஒருவர். அவரது உடல் கடந்த 24ம் தேதி அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி தனது கணவருக்கு 'தியாகி' அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அஷான்யா கூறியதாவது,
"அவர்கள் (பயங்கரவாதிகள்) வந்தவுடன், அவர்களில் ஒருவர் நாங்கள் இந்துவா அல்லது முஸ்லிமா என்று கேட்டார். அவர்கள் ஏதோ விளையாட்டாக கேட்கிறார்கள் என்று நினைத்தேன். நான் திரும்பி, சிரித்துவிட்டு என்ன நடக்கிறது என்று கேட்டேன். பின்னர் அவர்கள் தங்கள் கேள்வியை மீண்டும் கேட்டார்கள். நாங்கள் இந்துக்கள் என்று நான் பதிலளித்தவுடன், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
முதல் குண்டு என் கணவரைத் தாக்கியது, பயங்கரவாதிகள் நாங்கள் இந்துக்களா அல்லது முஸ்லிமா என்று கேட்க நேரம் எடுத்துக்கொண்டனர். இதுபோன்ற சூழ்நிலையில், பலர் ஓடிச் சென்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நேரம் கிடைத்தது. சுபமின் முகம் ரத்தத்தில் மூழ்கியது. என்ன நடந்தது என்று எனக்குப் புரியவில்லை. அவர் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு பெருமையுடன் தனது உயிரைத் தியாகம் செய்தார். மேலும் அவர் பலரின் உயிரைக் காப்பாற்றினார்.
அவருக்கு 'தியாகி' அந்தஸ்து வழங்க வேண்டும். சுபம் திவேதிக்கு 'தியாகி' அந்தஸ்து வழங்கப்படுவதைத் தவிர அரசாங்கத்திடமிருந்து எனக்கு வேறு எதுவும் வேண்டாம். அரசாங்கம் எனது விருப்பத்தை ஏற்றுக்கொண்டால், நான் வாழ்வதற்கு ஒரு காரணம் கிடைக்கும். ஒருவரின் பெயரையும் மதத்தையும் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும்" என்று அஷான்யா தெரிவித்தார்.
பயங்கரவாதிகளிடம் தன்னையும் சுடுமாறு கெஞ்சியதாகவும், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் அஷான்யா தெரிவித்தார். அரசாங்கத்திடம் சென்று தாங்கள் செய்ததைச் சொல்வதற்காகவே தன்னை உயிருடன் விடுவதாக பயங்கரவாதிகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். சுபமின் தந்தை சஞ்சய் திவேதி, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகக் கூறினார்.