மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் - #Puducherry -ல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை INDIA கூட்டணி சார்பில் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதியிருந்து மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து பலகட்டமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று (செப்.18) முழு அடைப்புப் போராட்டத்துக்கு INDIA கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று (செப்.18) முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளன. பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும். பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக
இன்று புதுச்சேரியில் உள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பள்ளி, கல்லூரிக்கு வருவதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது"
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.