"ஒட்டு கேட்கும் கருவியை வைத்தவர் யார் என்று எனக்கு தெரியும்" - ராமதாஸ் பேட்டி!
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், "காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் கடலோர மாவட்டங்களை மேம்படுத்தும் திட்டத்தில் 16 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வீதிக்கு வீதி அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தி வருவதால் சமுதாயமே சீரழிந்து வருகிறது. மக்கள் பலர் போதைக்கு அடிமைப்பட்டு கிடக்கும் நிலை மாற வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுவுக்கு எதிராக பாடம் நடத்தியதற்காக அவர் மீதே மாணவர்கள் மது பாட்டில்களை வீசிய சம்பவம் நடந்துள்ளது. மதிய இடைவெளிக்குப் பின் 4 மாணவர்கள் மது குடித்து விட்டு பள்ளிக்கு வந்துள்ளனர். இதனை எப்படி தமிழக அரசு எதிர்கொள்ளப் போகிறது.
மதுப்போதையில் தகராறு செய்த மகனை தந்தையே கொலை செய்துள்ளார். தூத்துக்குடியிலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து விடுவோம் என திமுக அரசு கொடுத்த வாக்குறுதி காற்றி பறக்கிறது. நெடுஞ்சாலையில் பெட்டிக் கடைகளை போல் பெருகியுள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி பாமக வெற்றி பெற்றது.
இளைஞர் சமுதாயமே போதைக்கு அடிமையாகி சாகிறதை எப்படி பொறுத்து கொள்ள முடியும். சோழ நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சோழர் குடும்பத்தினரை கெளரவம் செய்ய வேண்டும். மதுக்கு அடிமையானவர்களை மீட்டு கொடுப்பதாக கூறி மறுவாழ்வு மையம் நடத்தி வருபவர்களால் பலர் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். மறுவாழ்வு மையங்களை யார் எல்லாம் நடத்துகிறார்கள். இதனை நடத்தும் உரிமைத்தை அரசு கொடுக்கிறதா? இதில் அரசு என்ன வரையறை வைத்துள்ளது என்று தெளிவுப்படுத்த வேண்டும்.
மறுவாழ்வு மையங்களில் நடைபெறும் சித்ரவதையை அரசு ஊக்குவிக்கிறதா? திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை பிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.
5 லட்சம் பரிசு என அறிவித்தும் கூட குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்து ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையான காவல்துறை என நிரூபிக்க வேண்டும். பாமகவின் புதிய தலைவராக 30.25 முதல் நானே பொறுப்பேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
நம் கட்சியின் தலைமை அலுவலகம் சென்னையில் இருந்ததை மாற்றி தைலாபுரத்திலேயே தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. வேறு எங்கும் தலைமை அலுவலகம் இல்லை. இந்த தலைமை அலுவலகத்திற்கு கட்சி நிர்வாகிகள் வர வேண்டும், வேறு யாரும் தலைமை அலுவலகத்தை நடத்தினால் அது சட்டத்திற்கு புறம்பானது.
சிறப்பு பொதுக் குழு முடிவு செய்ததன் அடிப்படையில் நிறுவன தலைவராக நானே செயல்பட்டு வருகிறேன். கெளரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
யாராவது அவர்களின் பணியை செய்ய விடாமல் தடுத்தால் அவர்கள் எல்லாம் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அதிகார தோரணையோடு வலம் வந்தால் அது சட்டத்திற்கு புறம்பானதாகும்.
அவர்கள் அனைவரும் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... மீண்டும் தர்மமே வெல்லும்..சூதும் வாழ்வும் வேதனை செய்யும். அதனால் திட்டவட்டமாக பாமக கொடியை வேறு யாரும் பயன்படுத்த கூடாது. என் பெயரை போட கூடாது என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். 25ம் தேதியுல் இருந்து நடை பயணம் போவதாக சொல்லி இருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் சொல்லி இருக்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் நடை பயணத்தை தடை செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
யாரும் எந்த தலைவரும் எதிர் கொள்ளாத ஒரு செயலை செய்து இருக்கிறார்கள். நான் உட்காரும் இடத்தில் ஒட்டு கேட்கும் கருவி வைத்திருக்கிறார்கள். அதனை நாங்கள் கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்.10 நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்ய வேண்டுமாம். யார் வைத்தார்கள்? எதற்காக வைத்தார்கள் என விசாரணை நடத்தி வருகிறோம். காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.
யார் வைத்தார்கள் எதற்காக வைத்தார்கள் என்று எனக்கு தெரியும். இப்போது அதை நான் சொன்னால் காவல்துறை விசாரணை பாதிக்கப்படும். இதுவரை என் வாழ்நாளில் சந்திக்காத அசிங்கம் நிகழ்ந்துள்ளது.செயல் தலைவராக இருந்தும் என்னிடம் நடைபயணம் செல்ல அனுமதி வாங்கவில்லை. அதனால் நடைபயணத்தை தடை செய்ய சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.