’சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ - ரீரிலீசாகிறது அஜித்தின் அமர்க்களம்...!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். 1993-ல் வெளிவந்த 'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'ஆசை', 'காதல் கோட்டை', 'வாலி', 'அமர்க்களம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்',’வரலாறு’, ’பில்லா’ ’மங்காத்தா’, போன்ற படங்கள் பெரும் வெற்றியடைந்து அவருக்கு பெரிய ரசிகர்களைப் பெற்றுத்தந்தது.
1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் திரைப்படம் அஜித்தின் 25 ஆவது படமாகும். இயக்குநர் சரண் இயக்கிய இப்படத்தில் ரகுவரன், ராதிகா, நாஸர், அம்பிகா, வினு சக்ரவர்த்தி, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும் நடிகை ஷாலினி அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் இக்காலகட்டத்தில்தான் அஜித்-ஷாலினி ஆகியோர் காதலித்து கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
ஆக்ஷன் மற்றும் காதல் படமாக் வெளியான அமர்க்களம் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக பெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில்,அமர்க்களம் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக இதனை மறுவெளியீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
