#UttarPradesh | "நான் பாவம் செய்து விட்டேன்" - திருடிய சிலைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த நபர்... நடந்தது என்ன?
கோயிலில் இருந்து சாமி சிலைகளை திருடிச் சென்ற நபர், மனம் வருந்தி அந்த சிலைகளை மீண்டும் கோயிலில் விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டம் பிரயாக்ராஜ் பகுதியில் புகழ்பெற்ற கவுகாட் கஸ்லா ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் கட்டப்பட்டுள்ள கோயில் கருவறையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ராதா-கிருஷ்ணரின் அஷ்டதாது சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த சூழலில், நேற்று முந்தினம் இந்த சாமி சிலைகளை மர்ம நபர் திருடி சென்றார். இதனை அறிந்த கோயில் நிர்வாகி மஹந்த் ஜெய்ராம் தாஸ், நவாப்கஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில், திருட்டு நடைபெற்ற மறுநாளான நேற்று கோயிலுக்கு அருகே ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதியினர் அதை பிரித்து பார்த்தனர். அந்த மூட்டைக்குள் கோயிலில் திருடப்பட்ட ராதை-கிருஷ்ணரின் அஷ்ட தாது சிலைகள் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அதனுடன், இந்தியில் எழுதப்பட்ட ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில், "நான் பாவம் செய்து விட்டேன். எனது அறியாமையால் கிருஷ்ணர், ராதை சிலைகளை திருடினேன். சிலை திருடிய நாளில் தொடங்கி கெட்ட கெட்ட கனவுகளால் அவதிப்பட்டு வருகிறேன். மேலும் என்னால் நிம்மதியாக தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை.
என் மகனும், மனைவியும் கடுமையாக நோய்வாய் பட்டுள்ளனர். நான் சிலையை விற்கும் நோக்கத்தில் கொள்ளையடித்தேன். என் தவறுக்கு மன்னிப்பு கேட்டு சிலையை விட்டு செல்கிறேன். என் தவறை மன்னித்து, சிலைகளை மீண்டும் கோயிலில் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழந்தைகளை மன்னித்து சாமி சிலைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் நவாப்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிலையையும், கடிதத்தையும் கைப்பற்றினர். பின்னர் அந்த சிலைகள் மீண்டும் கோயிலில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.