"துணை முதலமைச்சர் பதவி மேல் துளியும் விருப்பமில்லை" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
"துணை முதலமைச்சர் பதவி மேல் துளியும் விருப்பமில்லை" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 46வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, சென்னை சிஐடி காலனியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இல்லத்திற்கு சென்றார். அங்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார்.
இதன் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..
அமைச்சர் பதவியில் உள்ளதால் மற்ற பிறந்தநாளை விட இந்த பிறந்தநாள் கூடுதல்
பொறுப்பில் உள்ளது. காலையிலிருந்து தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பிறந்த நாள் செய்தியாக தொண்டர்களுக்கு டிசம்பர் 17 நடைபெற உள்ள இளைஞர் அணி
மாநாட்டினை சிறப்பாக நடத்தி வெற்றி மாநாடாக மாற்றி தர வேண்டும் என்கிற செய்தியை சொல்ல விரும்புகிறேன். மக்களிடையே எழுச்சி ஏற்படுத்துவதற்காகவே இந்த இளைஞரணி மாநாட்டை தலைவர் எங்களிடத்தில் ஒப்படைத்துள்ளார்.” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனரே என்கிற கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ எனக்கு துணை முதலமைச்சர் பதவி மீது துளியும் விருப்பமில்லை. துணை முதலமைச்சர் பதவி என்பது முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை முடிவு செய்ய வேண்டிய ஒன்று” என தெரிவித்தார்.