“தலித் என்பதால் கொல்லப்பட்டார்” - நீதிமன்ற காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை சந்தித்தபின் ராகுல் காந்தி பேச்சு!
மகாராஷ்டிராவில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் கடந்த டிச.10 ஆம் தேதி, அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு புத்தகம் சேதப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் நீதிமன்றக் காவலில் இருந்த சோம்நாத் சூரியவன்சி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சோம்நாத் உயிரிழந்ததற்கு காரணமான காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த சோம்நாத் சூரியவன்சியின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி,
“இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், தாக்கப்பட்டவர்களையும் சந்தித்தேன். பிரேத பரிசோதனை அறிக்கை, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை என்னிடம் காட்டினார்கள். அவரை போலீசார் கொன்றுள்ளனர். காவல்துறையை பாதுகாப்பதற்காக முதலமைச்சர் சட்டசபையில் பொய்யான அறிக்கையை அளித்துள்ளார். அந்த இளைஞன் ஒரு தலித் என்பதாலும், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க முயன்ற காரணத்தினாலேயும் கொல்லப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.