முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - புதிய மைல்கல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக, பல்வேறு கட்டங்களாக காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறார்.
இதனை தொடர்ந்து 15.9.2022 அன்று, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பரிமாறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில், இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தொடங்கப்பட்டது.இதன் மூலம், சுமார் 18.50 லட்சம் மாணவ-மாணவிகள் காலை உணவு உண்டு பயனடைந்து வருகின்றனர்.
15.7.2024 அன்று, காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், இந்தத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம், 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 2,23,536 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
சமீபத்தில், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவெடுத்தது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில், 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்தத் திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் பசிப்பிணியைப் போக்கி, அவர்கள் கல்வியில் கவனம் செலுத்த உதவுகிறது. அரசின் தொடர் முயற்சிகள், திட்டத்தின் பயனை இன்னும் அதிக மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.