"சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை" - பிரதமர் மோடி!
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக தான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றும் வரும் நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்து சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பேசி வருவதாக எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்” – இபிஎஸ் பேட்டி!
இது தொடர்பாக பிரதமர் மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
"சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பாஜக செயல்படாது. காங்கிரஸ் கட்சி அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறது என்பதை மக்களிடம் எடுத்துரைத்தேன். இதையடுத்து, தென் மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக தான் பேசுகிறேன். அரசியல் சாசனத்திற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய போது மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று கூறினார்கள். இப்போது காங்கிரஸ் அதிலிருந்து விலகிச் செல்கிறது, அவற்றை அம்பலப்படுத்துவது எனது பொறுப்பு"
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.