“தமிழ் மண்ணில் இருப்பது போல் உணர்கிறேன்” - #Chicago-வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக் கூடிய உணர்வை தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 17 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு வரும் செப்.14-ம் தேதி நாடு திரும்பும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்ற நிலையில் தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சிகாகோவில் நடைபெற்ற வடஅமெரிக்கா தமிழ்ச்சங்க கலைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து சென்றார். அப்போது அவர் பேசியதாவது;
“அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ, அதைப்போல அல்ல, அதை விட மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சி உள்ளது. அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்க கூடிய உணர்வை தருகிறது. நான் அமெரிக்காவில் இருக்கிறேனா? அல்லது தமிழ் மண்ணில் இருக்கிறேனா? என்று தெரியவில்லை. தமிழ் மண்ணில் இருப்பது போலவே உணர்கிறேன். அமெரிக்காவிற்கு Late ஆக வந்திருக்கிறேன். ஆனால், வரவேற்பு Latest ஆக உள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
“சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!” என்று குறிப்பிட்டு புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.