"ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; அவர் உங்களை ஏமாற்ற மாட்டார்" - காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி!
ரேபரேலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன், அவர் உங்களை ஏமாற்ற மாட்டார் என்று கூறினார்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கான கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கான 4ம் கட்ட தேர்தல் கடந்த 13ம் தேதி நடைபெற்றது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ரேபரேலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது, "நான் என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் என்னை உங்களில் ஒருவராகக் கருதியது போல, அவருக்கும் அதே அன்பையும் பாசத்தையும் வழங்குங்கள். ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.