”எனக்கு கணினியை இயக்கத் தெரியாததால், மக்களவை இணையதளத்தில் கேள்விகளை பதிவேற்றுவது இல்லை” - எம்.பி கிரிதாரி யாதவ்
”எனக்கு கணினியை இயக்கத் தெரியாததால், மக்களவையின் இணையதளத்தில் கேள்விகளை நான் பதிவேற்றுவது இல்லை” என ஐக்கிய ஜனதா தள எம்.பி கிரிதாரி யாதவ் கூறியுள்ளார்.
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிராநந்தனியுடன் தனது நாடாளுமன்ற உள்நுழைவைப் பகிர்ந்து கொண்டதாகவும், அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கியதாகவும் மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், புகாரளித்த நிஷிகாந்த் துபே மற்றும் புகாருக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா ஆகியோரை நேரில் அழைத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.
அதில் மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் பணம், பரிசு பொருட்களை பெற்று கொண்டு அவரை கேள்வி எழுப்ப அனுமதித்ததாக கூறப்படுகிறது. கேள்வி கேட்பதற்காக தான், மஹுவா மொய்த்ரா தன் இணையதள விபரம், பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை அவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டது. இந்த அறிக்கை விவாதத்தில், மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் கோபமடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், மஹுவா மொய்த்ரா மீதான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனக்கூறி வெளிநடப்பு செய்தனர். இதில் ஐக்கிய ஜனதா தள எம்.பி கிரிதாரி யாதவும் இடம்பெற்றிருந்தார். மொய்த்ரா வெளியேற்றப்பட்ட பிறகு மக்களவையில் பேசிய யாதவ், மக்களவையின் இணையதளத்தில் கேள்விகளை நான் பதிவேற்றவில்லை,
"எனது பிஎஸ்தான் (தனிப்பட்ட செயலாளர்) அதைச் செய்கிறார். எனக்கு கணினியை இயக்கத் தெரியாது. அதனால் என் ஊழியர்கள் எனக்காக அதைச் செய்கிறார்கள். எனது சொந்த கடவுச்சொல் கூட எனக்கு நினைவில் இல்லை, இந்த முறை நான் பயந்து எந்த கேள்வியும் கொடுக்கவில்லை. எங்களை மிரட்டுகிறார்கள்,” என்றார். யாதவின் அறிக்கையைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா ஒவ்வொரு உறுப்பினரும் கேள்வியை தாங்களே தயார் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின் மீண்டும் பேசிய கிரிதர யாதவ், "ஹிரானந்தானி அழைக்கப்படுவார் என நெறிமுறைகள் குழுவின் தலைவர் கூறியிருந்தார். நாம் எம்.பி.க்களை அழைக்கிறோம், ஆனால் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முதலாளிகளை அழைப்பதில்லை," என்று கூறினார்.
.