அமித்ஷா:செங்கோட்டையன் சந்திப்பு பற்றி தெரியாது - நயினார் நாகேந்திரன் பேட்டி!
குடியரசுத்துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது
குடியரசுத்துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியானது. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோருக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழர் ஒருவர் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்றுள்ளார். அவரை வேட்பாளராக அறிவித்ததற்கு பிரதமர் மற்றும் பாஜக தேசிய தலைவர் அவர்களுக்கு நன்றி. இன்றைய தினம் உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சியான நாள்.
குடியரசு துணைத்தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தேன். ஆனால் மத்திய உள்துறை அமைச்சரை செங்கோட்டையன் சந்தித்தது பற்றி எனக்கு தெரியாது. குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவின் போது மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தேன். எதார்த்தமாக எவ்வாறு உள்ளீர்கள் என்பது குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார்
ஒன்றிணைந்த அ.தி.மு.க என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதேவேளையில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் பயணம் செய்தவர்கள். எல்லோரும் தி.மு.க வரக்கூடாது என்பதற்காக செயல்பட்டவர்கள், எதிரணியில் செயல்பட்டவர்கள். தி.மு.க.விற்கு எதிராக அரசியல் செய்தவர்கள். அந்த அடிப்படையில் எல்லோரும் ஒன்றாக வரவேண்டும். எதிரணியில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள தி.மு.க.வை அகற்றி, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்”
என்று தெரிவித்தார்.