"வன்முறையான படம் எடுக்கவில்லை" - சலார் இயக்குநர் பிரசாந்த் நீல் பேட்டி!
சலார் திரைப்படம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், வன்முறையான திரைப்படம் எடுக்கவில்லை என அதன் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.
கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
டிரைலரிலும் அதைக் காண முடிந்தது. சலார் திரைப்படம் வரும் டிச.22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்தது. டிரைலர் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: ‘மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்…ஆனால், அச்சம் வேண்டாம்…’ – மன்சுக் மாண்டவியா
இத்திரைப்படம் 2 மணி நேரம், 55 நிமிடங்கள், 22 நொடிகள் ரன்னிங் டைமாக உருவாகியிருக்கிறது. தீவிரமான சண்டைக்கு தயாராகுங்கள் என படக்குழு கூறியுள்ளது. சலார் திரைப்படத்தின் முதல் பாடல் 5 மொழிகளிலும் டிச.13-ம் தேதி வெளியானது. தமிழில் ஆகாச சூரியன் எனும் பெயரில் வெளியானது.
இந்த நிலையில் சலார் திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகர்கள் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் படத்தின் கதை மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்து பேசினர். அப்போது இத்திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்தது பற்றி இயக்குநர் பிரசாந்த் நீல் பேசினார்.
அப்போது இத்திரைப்படம் இரண்டு குழந்தை கால நண்பர்களை பற்றியது என்றார். இந்த கதை முழுவதும் தேவா மற்றும் வர்தாவைப் பற்றியது என்றார். நான் பல ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவைப் பார்த்து வருகிறேன். அதனுடன் ஒப்பிடும்போது எனது படத்தில் பெரிய அளவு வன்முறை இல்லை. ஒரு படத்தை இவ்வளவு வன்முறையாக உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. இருப்பினும் என்னுடைய திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றார். மேலும் கேஜிஎஃப் படத்துக்கும் சலார் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.