“தவறாக பேசவில்லை... மன்னிப்பு கேட்க மாட்டேன்..!” - அமைச்சர் உதயநிதி பேச்சு
தான் எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை என்றும், சனாதனம் குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்
நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, எம்.பி. தயாநிதிமாறன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது, ஒரு பக்கம் தாய்மார்களும், தம்பிகளும் தீபாவளி வாழ்த்துகள் என்று சொல்லி வரவேற்றார்கள். நான் வாழ்த்துகள் வாழ்த்துகள் என்று சொன்னேன். மற்றொரு
பக்கம் திமுக இளைஞரணி நிர்வாகிகள் பெரியார் வாழ்க, பெரியார் வாழ்க என்று சொல்லி
வரவேற்றார்கள். இது தான் திராவிட மாடல். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான்
திராவிட மாடல் அரசு.
சென்னையை அழகாக பராமரிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி. கட்சி நிர்வாகிகளின் உழைப்பால் தான், சென்னையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் மிகப்பெரிய வெற்றி பெற்றோம். 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அதேபோல் வெற்றி பெற வேண்டும்.
சென்னை இன்று சென்னையாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தூய்மைப் பணியாளர்கள் தான். நாம் சென்னையில் தூய்மையான காற்றை சுவாசிக்க காரணம் தூய்மை பணியாளர்கள். வெயில், மழை பார்க்காமல் உழைப்பவர்கள் தூய்மை பணியாளர்கள். சென்னை என்ற குழந்தையை பார்த்து கொள்ளும் தாய் தூய்மை பணியாளர்கள்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்ததன் மூலம் 7 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு நாளை முதலமைச்சர் 1000 ரூபாய் வழங்குகிறார். இப்போது மகளிர் உரிமை திட்டத்தில், மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சனாதனம் குறித்து நான் பேசியது, பேசியது தான். நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொன்னார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எது வந்தாலும் சட்டரீதியாக சந்தித்து கொள்வோம். நான் எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை. சமூக நீதி வேண்டும், அனைவரும் சமம் என்பதற்காக தான் நான் பேசினேன். நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் பையன். கலைஞரின் பேரன். கொள்கையை தான் பேசினேன். பேசியதிலிருந்து பின் வாங்கமாட்டேன். எது வந்தாலும் தொண்டர்கள் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.