“அஞ்சாமை கதையை கேட்டு அழுது விட்டேன்...” - நடிகர் விதார்த் பேச்சு!
“இன்றைய காலக்கட்டத்தில் இருக்கக்கூடிய சமூக பிரச்னையை பேசும் திரைப்படம்” என அஞ்சாமை திரைப்படம் குறித்து நடிகர் விதார்த் கூறியுள்ளார்.
நடிகர் விதார்த், வாணி போஜன் நடித்துள்ள ‘அஞ்சாமை’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. அப்போது நடிகர் விதார்த் கூறியதாவது: “இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது நான் அழுதுவிட்டேன். நடிகர் மம்முட்டி இத்திரைப்படத்தில் நடிக்க இருந்தது. ஆனால் அவர் கொடுத்த தேதியும் தயாரிப்பாளர் கொடுத்த தேதியும் ஒத்துப் போகாததால் நடிகர் ரகுமான் இத்திரை கதைக்குள் வந்தார். அவர் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் இருக்கக்கூடிய சமூக பிரச்னையை இந்த திரைப்படம் பேசியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்ததில் பெருமைப்படுகிறேன். இந்தத் திரைப்படத்தை அனைவராலும் தொடர்பு படுத்திக் கொண்டு பார்க்க முடியும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் சுப்புராமன்,
“இத்திரைப்படம் உருவானது காலத்தின் கட்டாயம் என்று நினைக்கிறேன். ஒரு சட்டம் இயற்றப்படும் போது அந்த சட்டத்தால் பாதிக்கப்படும் ஒரு மனிதனின் கதையாக
இது அமைந்திருக்கிறது. நடிகர் விதார்த் மிக அருமையான நடிகர். அவரிடமிருந்து இன்னும் நிறைய தங்கத்தை எடுத்துள்ளோம். அருமையான நடிப்பை இந்த திரைப்படத்தில்
வெளிப்படுத்தியிருக்கிறார். வாணி போஜன் வேறொரு பரிமாணத்தில் நடித்துள்ளார். மேடை நாடகங்களில் நடிப்பவர்கள் போல வாணி போஜன் திரைப்படத்தில் நடித்துள்ளார்” என தெரிவித்தார்.