”அங்கீகாரமாக கருதுகிறேன்” - மீண்டும் அமைச்சரானது குறித்து மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!
ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று தெரிவித்தது. இதையடுத்து இன்று(ஏப்.28) ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், மனோ தங்கராஜ் பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மனோ தங்கராஜ், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதன் பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “ மீண்டும் ஒருமுறை மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பை முதலமைச்சர் தந்திருக்கிறார். பால்வளத் துறையை பொறுத்தவரை ஏழை எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த ஒரு துறை. அது மட்டுமல்ல நகர பகுதியில் வாழக்கூடிய மக்களுக்கு பால் விநியோகம் செய்கின்ற ஒரு துறை.
கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏற்கெனவே முதலமைச்சர் ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இத்துறை சிறப்பாக செயல்பட முதலமைச்சர் அறிவுரை தந்திருக்கிறார். மீண்டும் பால் வள துறை கிடைத்திருப்பது அவர் கொடுத்திருக்கும் அங்கீகாரமாக கருதுகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு மக்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பிற்கும் ஏற்றவாறு சிறப்பாக செயல்படுவேன்”
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.