“புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன்” - முதலமைச்சர் #MKStalin பேட்டி
புயல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசரக்கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் கள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"தமிழ்நட்டில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநாகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர்களிடம் தொடர்பு கொண்டு கள நிலவரங்களை கேட்டறிந்தேன். அங்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொண்டேன். ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது. இன்று இரவு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முழுமையான நிவாரண நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் களத்தில் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் உள்ளது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.