சலார் திரைப்படம் தாமதத்துக்கு காரணம் நான்தான்: நடிகர் பிருத்விராஜ் விளக்கம்!
சலார் திரைப்படத்தின் தாமதத்துக்கு நான்தான் காரணம் என நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து 'சலார்' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். டிரைலரிலும் அதைக் காண முடிந்தது.
சலார் திரைப்படம் வரும் டிச.22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்திருந்தது. ட்ரைலர் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘வாரணம் ஆயிரம்’ – திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் பிருத்விராஜ், "சலார் படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. எனக்கு பிரபாஸைவிட குறைவான முக்கியத்துவம் இருந்தாலும் கதை பிடித்திருந்தது. இதில் நடித்தே ஆக வேண்டுமென முடிவெடுத்தேன்.
ஆனால் எனது 'ஆடு ஜீவிதம்' பட படப்பிடிப்பு தள்ளிப்போகவே சலார் படத்துக்கு குறிப்பிட்ட தேதியில் வர முடியவில்லை. நான் விலகிவிடுவதாக கூறினேன். ஆனால் இயக்குநர் பிரசாந்த் நீல் எனக்காக காத்திருப்பதாகக் கூறினார். அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து எடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு மதிப்பளித்து எனக்காக பல மாதங்கள் தாமதமாக படப்பிடிப்பு நடத்தினார்" எனக் கூறியுள்ளார்.