"தவறுக்கு வருந்துகிறேன்..." சுதா கொங்கராவின் பதிவால் பரபரப்பு!
சாவர்க்கர் சர்ச்சைக்கு இயக்குநர் சுதா கொங்கரா வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் சூரரைப் போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்துக்கு 'புறநானூறு' எனப் பெயரிடப்பட்டது. சில காரணங்களால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுதா கொங்கரா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
“நான் வரலாறு பட்டப்படிப்பை முடித்துள்ளேன். என்னுடைய ஆசிரியர் ஒருமுறை சொன்னார். சாவர்க்கர் மிகப் பெரிய தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர். சாவர்க்கர் திருமணம் செய்து, அவரது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அந்தப் பெண்ணுக்கு வீட்டில் இருப்பதற்குத்தான் விருப்பம். ஏனென்றால் அந்தக் காலத்தில் பெண்கள் படிக்கமாட்டார்கள். பின்பு அவள் படிக்க போகும்போது, அந்தத் தெருவில் உள்ளவர்கள் அவர்களை கிண்டல் செய்வார்கள். அந்த அம்மா அழுதுகொண்டு, பள்ளிக்கு போகமாட்டேன் எனச் சொல்வார். அப்போது சாவர்க்கர் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று படிக்க வைக்கச் சென்றார். இது சரியா தப்பா? அங்கிருந்துதான் என்னுடைய கேள்விகள் எழுந்தன”
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இதையும் படியுங்கள் :“அஜித்தை நடிகர் என்பதில் அடக்கிவிடமுடியாது” – அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதர் நெகிழ்ச்சி!
இது இணையத்தில் வைரலானது. இதில் தகவல் பிழை இருக்கிறதெனவும் அது ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே எனவும் பலரும் சமூகவலைதளத்தில் விமர்சித்தனர்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் சுதா கொங்கரா கூறியதாவது:
"என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.