விபத்தை ஏற்படுத்தி விட்டு 2 கி.மீ. தூரம் இருசக்கர வாகனத்தை இழுத்துச்சென்ற லாரி!
ஹைதராபாத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஒன்று நிற்காமல் பைக்கை 2 கிலோ மீட்டர் தூரம் தீப்பொறி பறக்க இழுத்து சென்ற நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சாலைகளில் தினமும் விபத்துகள் நடக்கின்றன. இதில் பல விபத்துகள் எதிர்பாராத விதமாக ஏற்படுகின்றன. சில விபத்துகள் கவனக்குறைவால் ஏற்படுகிறது. இப்படியான விபத்துகளில் பொதுமக்கள் பலியாவதும், காயங்கள் அடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
விபத்துகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கூட விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மட்டும் குறைந்தபாடில்லை. குறிப்பாக சில இடங்களில் விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தாமல் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
Dear Sir, See this incident, this was happened on owaisi hospital to Lb Nagar to hayath Nagar Route, please alert all police stations on this route pic.twitter.com/9SgrtvmGUd
— Ravikumar Inc Tpcc lb nagar (@V24751Vadlamudi) April 14, 2024
இந்நிலையில் தான் தெலங்கானா மாநிலத்தின் தலைநகராக உள்ள ஹைதராபாத்தில் நெஞ்சை பதறவைக்கும் வகையில் விபத்து ஒன்று நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் லாரி ஒன்று வேகமாக செல்கிறது. லாரியின் முன்பக்கத்தில் கிளீனர் அமரும் இருக்கையின் கீழ் உள்ள படியில் ஒருவர் தொங்கியபடி நிற்கிறார். அதோடு லாரியின் முன்பக்க டயரில் பைக் ஒன்று சிக்கி உள்ளது. இருப்பினும் கூட டிரைவர் லாரியை நிறுத்தாமல் செல்கிறார். இந்நிகழ்வில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பைக் சாலையில் இழுத்து செல்லப்பட்டுள்ளது.
லாரியின் சக்கரத்தில் சிக்கி உள்ள பைக், சாலையில் உரசியபடி செல்வதால் தீப்பொறி பறக்கிறது. இறுதியாக லாரி நின்ற பின் அதன் ஓட்டுனர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து லாரியை கைப்பற்றிய போலீசார் அதன் ஓட்டுனரை கைது செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.