"அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் சரியா?"- மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக
திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டத்தை
மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் திருச்சி உள்ளிட்ட
மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. ரேஷன் கடைகள், பள்ளி குழந்தைகளுக்கு
மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரி கடலூரை சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், இரும்புச் சத்து கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ணும் போது,
ரத்தசோகை உள்ள மக்களின் உடல் நலம் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக
தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த இரு வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதையும் படியுங்கள் : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்!
அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தலசீமியா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என விளம்பர பலகைகள் அனைத்து ரேஷன் கடைகளின் முன் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். எனவே செறிவூட்டப்பட்ட அரிசி பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்யத் தேவையில்லை என விளக்கம் அளித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், எந்த அறிவியல் ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி
விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.