இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி? ஒரு மினி ரிவ்யூ!
இந்த வாரம் வெளியான கடுக்கா, குற்றம்புதிது, சொட்ட சொட்ட நனையுது, நறுவீ, வீரவணக்கம் மற்றும் மலையாள டப்பிங் படமான லோகா ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் கதை எப்படி? நடித்தவர்களின் நடிப்பு எப்படி? படத்தில் சுவாரஸ்யம் இருக்குதா? இதோ மினி ரிவியூ.
கடுக்கா :
எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் விஜய்கவுரிஷ், ஆதர்ஷ், ஸ்மேகா நடிப்பில் வெளி வந்துள்ள கிராமத்து பின்னணியிலான காதல் படம் கடுக்கா. தங்கள் கிராமத்துக்கு புதிதாக வரும் கல்லுாரி மாணவி ஸ்மேகாவை, நண்பர்களான விஜய்கவுரிஷ், ஆதர்ஷ் இருவருமே காதலிக்கிறார்கள். இரண்டு பேரையும் காதலிக்கிறார் ஹீரோயின். ஒரு கட்டத்தில் இது நண்பர்களுக்கு தெரிய வர, அவர்களுக்குள் சண்டை வருகிறது. இதில் யாரை திருமணம் செய்தார் ஹீரோயின். ஒரே நேரத்தில் இருவரையும் காதலித்தது ஏன் என்பதை ஈரோடு கிராம பின்னணியில் சொல்லும் படம் இது.
காதல் படமாக இருந்தாலும் காமெடி, கொங்கு வட்டார பேச்சு, அங்குள்ள கிராமத்து மக்களின் பழக்க வழக்கங்கள் கலந்து கமர்ஷியல் படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர். வெட்டி ஆபீசராக வரும் ஹீரோ விஜய்கவுரிஷ் அப்பாவித்தனம், காமெடி கலந்த நடிப்பால் மனதில் நிற்கிறார். பெயிண்டராக வரும் மற்றொரு ஹீரோ ஆதர்சும் தன் பங்கிற்கு நடிப்பில் மிரட்டி இருக்கிறார். புதுமுக ஹீரோயின் ஸ்மேகா அக்மார்க் ஈரோடு கிராமத்து கல்லுாரி மாணவியாக நடித்து இருக்கிறார். இரண்டு பேரிடமும் ஒரு காரணத்தை சொல்லி அவர்களை காதலிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
இவர்களை தவிர, பெற்றோர்களாக வரும் கொங்கு மஞ்சுநாதன், கவுசல்யா, மணிமேகலை நடிப்பும் இயல்பாக இருக்கிறது. நீண்ட காலத்துக்குபின் கொங்கு பின்னணியிலான கதையும், அந்த ஸ்லாங்கும், புதுமுக நடிகர்களின் நடிப்பும், ரசிக்க வைக்கிறது. கிராமத்து வீடுகள், டீக்கடை, அங்குவசிக்கும் மனிதர்கள், சண்டை சச்சரவு, திருப்பூர் வாழ்க்கை, போலீஸ் ஸ்டேஷன் சீன்கள் மனதில் நிற்கிறது. காதல் கதை என்றாலும் கடைசியில் ரோமியாக்களாக சுற்றும் ஆண்களால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் கல்வி எப்படி பாதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில புத்தசாலி பெண்கள் காதலை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லும் கரு.
சொட்ட சொட்ட நனையுது :
வழுக்கை தலை பிரச்னையால் திருமணம் முடிக்க முடியாமல் தவிக்கிறார் ஹீரோ நிஷாந்த் ரூசோ. அவரை பார்க்கும் பெண்கள் அதை குறையாக சொல்லி, நோ சொல்கிறார்கள். ரொம்பவே பீல் பண்ணுபவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷாலினியுடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஆனாலும், ஒரு வில்லங்க வீடியோவால் அந்த திருமணம் ஸ்டாப் ஆகிறது. சென்னை சென்று மார்டன் ட்ரீட்மென்ட் எடுத்து தலையில் முடி வளர்க்கிறார் ஹீரோ.
இன்ஸ்டா ரீல்ஸ் பைத்தியமான இன்னொரு ஹீரோயின் வர்ஷாவுக்கும் அவருக்கும் திருமணம் நடக்கும் நிலையில், அவர் தலையில் முடி வளரவில்லை விக் வைத்து இருக்கிறார் என்பது சிலருக்கு தெரிய வருகிறது. சில காரணங்களால் அவர்கள் திருமணம் நிறுத்த முயற்சிக்கிறார்கள் அந்த திருமணம் நடந்ததா? இல்லையா என்பது சொட்ட சொட்ட நனையுது திரைப்படத்தின் கதை. நவீத் எஸ்.ப்ரித் இயக்கி இருக்கிறார். சொட்ட தலையால் அவதிப்படுவர்கள் பிரச்னையை படம் பேசுகிறது. இரண்டு ஹீரோயின்களாக நன்றாக நடித்து இருக்கிறார்கள். ஆனாலும், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையால், ரசிக்க முடியாத காமெடிகளால் படம் தடுமாறுகிறது.
குற்றம்புதிது :
போலீஸ் அதிகாரி மகளான ஹீரோயின் சேஷ்விதா, ஒருநாள் இரவில் கடத்தி கொல்லப்படுகிறார். புட் டெலிவரி பாயான ஹீரோ தருண் விஜயை சந்தேகப்பட்டு விசாரிக்கும் போலீஸ், விசாரணை முடிவில், அவர் குற்றமற்றவர் என சொல்லி வீட்டுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், சில நாட்கள் கழித்து அந்த கொலையை நான்தான் செய்தேன் என்று சரண்டர் ஆகிறார் ஹீரோ. ஆனால், அவர் பேச்சில் ஏகப்பட்ட குழப்பங்கள். இதற்கிடையில், கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஹீரோயின் மீட்கப்படுகிறார். அப்படியானால் என்ன நடந்தது? யார் கொல்லப்பட்டார்கள். ஹீரோ அப்படி நடிக்க காரணம் என்ன என்பது குற்றம்புதிது கதை. நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கி உள்ளார்.
காதல் காட்சிகளில், போலீஸ் விசாரணை காட்சிகளில், மனநலம் பாதிக்கப்பட்ட காட்சிகளில் சிறப்பான நடிப்பை தந்து இருக்கிறார் தருண்விஜய். அப்பா மகள் பாசம், காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார் ஹீரோயின் சேஷ்விதா. போலீஸ் அதிகாரி கம் அப்பாவாக கோலிசோடா மதுசூதனனும், ஹீரோ பக்கத்து வீட்டு காரராக ராம்ஸ் நன்றாக நடித்து இருக்கிறார்கள். போலீஸ், விசாரணை சீன்கள், கிளைமாக்ஸ் மற்றும் அதற்கு முந்தைய காட்சிகள் கவரும்படி இருக்கிறது. கொலை நடந்தது எப்படி? கொலையானது ஏன்? அதை மறைப்பது ஏன் என்ற விஷயம் படத்தின் பிளஸ். கிரைம் திரில்லர் பாணி கதையில் இது புதிது.
நறுவீ :
ஊட்டி மலை கிராமம் அருகே உள்ள ஒரு ஏரியாவில் ஆண்டுகள் சென்றால் திரும்பமாட்டார்கள் என்பது நம்பிக்கை. அங்கே தங்களின் காபி எஸ்டேட் ஆய்வுக்காக ஹீரோயின் பாடினிகுமார், விஜே பப்பு, அவர்களின் டீம் செல்கிறது. அங்கே சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. அது ஏன்? 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஆசிரியராக பணியாற்றிய ஹீரோ ஹரீஷ் அலக் காணாமல் போகிறார். அவருக்கு என்ன நடந்தது. இரண்டு கதைகளுக்கும் என்ன தொடர்பு என்பது நறுவீ படத்தின் கதை. நறுவீ என்றால் நறுமண மலர்கள் என அர்த்தம். முழுக்க ஊட்டி ஏரியாவில் அழகாக படமாக்கப்பட்டது படத்தின் பெரிய பிளஸ்.
இப்போதைய எஸ்டேட் ஆய்வு கதை, டீச்சர் சம்பந்தப்பட்ட இரண்டு கதைகளை மாறி, மாறி சொல்லி கடைசியில் ஒன்றாக இணைக்கிறார் இயக்குனர் சுபாரக்முபாரக். பாடினி சம்பந்தப்பட்ட காட்சிகள், ஹீரோ ஹரிஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஈர்க்கிறது. அமானுஷ்யம் விஷயங்கள் ஓகே. மலைவாழ் சிறுமியாக நடித்தவரின் நடிப்புக்கு பாராட்டு. ஆனாலும், பேசிக்கொண்டே இருப்பது பல இடங்களில் போராடிக்கிறது. கிளைமாக்ஸ் கூட கொஞ்சம் ஏமாற்றம்தான். மலைவாழ் மக்களின் வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி. சிறுவயது திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கருவுக்காக மட்டும் இயக்குனரை பாராட்டலாம்.
வீரவணக்கம் :
கேரளாவில் 1940களில் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த பி.கிருஷ்ணபிள்ளை வாழ்க்கையை, அவர் சாதித்த விஷயங்களை, அவரின் போராட்டங்களை விவரிக்கிறது வீரவணக்கம், பி.கிருஷ்ணபிள்ளையாக சமுத்திரக்கனி நடித்து இருக்கிறார். அனில் வி.நாகேந்திரன் இயக்கி இருக்கிறார். அந்த காலத்தில் கேரளாவில் அடித்தட்டு மக்கள் அனுபவித்த கொடுமைகள், ஜாதிபாகுபாடுகள், அடக்குமுறைகளை அழுத்தமாக சொல்லி இருக்கிறது கதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பி.கிருஷ்ணபிள்ளை என்ன செய்தார். எப்படி மக்களை ஒருங்கிணைத்தார்.
அவரின் போராட்டங்கள் எப்படி என்பதையும் எளிமையாக பதிவு செய்து இருக்கிறார்கள். கிருஷ்ணபிள்ளையாக வாழ்ந்து இருக்கிறார் சமுத்திரக்கனி. பண்ணையார், அந்த ஊரில் வசிக்கும் விவசாயிகள், அவர்களின் கொடுமைகள், கதறல்கள், வலி, வேதனை நெஞ்சை உருக்குகிறது. கிருஷ்ணபிள்ளை காலத்தில் வாழ்ந்த 97 வயதான கம்யூனிஸ்ட் பாடகி பி.கே.மேதினி வாயிலாக கதையை சொல்லியிருப்பது சிறப்பு. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், அவரின் பாடல்கள் சிலிர்ப்பு. பிரமாண்டம், நட்சத்திர பட்டாளம் இல்லாவிட்டாலும் கதை வலுவாக இருக்கிறது. 1940களில் இருந்த அரசியல், சமூக சூழ்நிலையையும் தெளிவாக விவரித்து இருக்கிறார் இயக்குனர். சில குறைகள் இருந்தாலும், ஒரு வரலாற்று புத்தகம் படித்த உணர்வு.
லோகா :
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில், டொம்னிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன், பிரேமலு நஸ்லான், டொவினோதாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வந்துள்ள படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. ஸ்வீடனில் இருந்து பெங்களூர் வரும் கல்யாணியை காதலிக்கிறார் நஸ்லன். ஒரு கட்டத்தில் கல்யாணி ரத்தம் குடிக்கும் ரத்தக்காட்டேரி, வீட்டில் ப்ரிட்ஜில் ரத்தம் வாங்கி வைத்து குடிக்கிறார் என்பதை அறிந்து பயப்படுகிறார். உடல்உறுப்புகளை கடத்தும் வில்லன் கேங், பெங்களூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாண்டி ஆகியோர், சில பிரச்னைகள் காரணமாக கல்யாணியை துரத்துகிறார்கள். என்ன நடக்கிறது. யார் ஜெயித்தார்கள் என்பது லோகா கதை.
இதை மலை வாழ் மக்கள் தெய்வம் நீலி கதையுடன் இணைந்து காதல், காமெடி, ஆக்சன் கலந்து கமர்ஷியலாக கொடுத்து இருக்கிறார்கள். நடை, உடை, நடிப்பு மற்றும் ஆக் சனில் மிரட்டி இருக்கிறார் கல்யாணி. குறிப்பாக, இடைவேளை, கிளைமாக்ஸ் பைட் செம. அப்பாவிதனமான காதலனாக வரும் நஸ்லன், கல்யாணிக்கு உதவ கெஸ்ட் ரோலில் வரும் டொவினோ தாமஸ் சம்பந்தப்பட்ட சீன்களும் மாஸ். பெங்களூர் பின்னணியில் இரவில் நடக்கும் நடக்கும் கதையும், மலைவாழ் மக்களின் ராஜா, சிறுமி சம்பந்தப்பட்ட கதையும் மாஸ். ஒரு கட்டத்தில் அதிரடியாக மாறும் அந்த மலைவாழ் சிறுமி கண்களி்ல் நிற்கிறார். தமிழ் டப்பிங்கை சிறப்பாக செய்து இருக்கிறார் ஆர்.பி.பாலா.
கிளைமாக்சில் கெஸ்ட் ரோலில் வந்து சர்ப்பிரைஸ் கொடுக்கிறார் தயாரிப்பாளரான நடிகர் துல்கர்சல்மான். இடைவேளைக்குபின் கொஞ்சம் தொய்வு, சில லாஜி்க் மீறல், கல்யாணி கேரக்டரில் சில சந்தேகங்கள் படத்தின் மைனஸ். ஆனாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படமாக இருந்தாலும் அதிரடி சீன்கள், திருப்பங்கள், சண்டைகாட்சிகள், கெஸ்ட்ரோலில் வரும் நடிகர்கள், நட்பு, மாறுபட்ட திரைக்கதையால் மலையாள சினிமாவை மீண்டும் உயர்த்தி பிடித்து இருக்கிறது லோகா. கல்யாணி பிரியதர்ஷன் மற்ற ஹீரோயின்கள் பொறமைப்படும் ஸ்டார் ஆக மாறியிருக்கிறார். இது முதற்பாகம்தான், இன்னும் 4 பாகம் இருக்கிறது என்ற அறிவிப்பு கூடுதல் சர்ப்பிரைஸ்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்