For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”காந்தாரா சாப்டர் 1” எப்படி..? - திரை விமர்சனம்..!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் முதல் பாகம் மாதிரி மிரட்டலா? அல்லது சுமாரா? படத்தின் விமர்சனம் இதோ உங்களுக்காக..!
05:07 PM Oct 02, 2025 IST | Web Editor
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் முதல் பாகம் மாதிரி மிரட்டலா? அல்லது சுமாரா? படத்தின் விமர்சனம் இதோ உங்களுக்காக..!
”காந்தாரா சாப்டர் 1” எப்படி      திரை விமர்சனம்
Advertisement

கடந்த 2022-ம் ஆண்டு கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகிய படம் ‘காந்தாரா’. இந்தப் படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கன்னடம், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியான காந்தாரா உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்நிலையில் இந்தப் படத்தின் முந்தைய பாகமாக ‘காந்தாரா சாப்டர் 1’ இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகம் மாதிரி இந்த ‘காந்தாரா சாப்டர் 1’ மிரட்டலா? அல்லது சுமாரா? விமர்சனம் உங்களுக்காக இதோ..!

Advertisement

பாங்கரா அரசனுக்கு ஈஸ்வரனின் பூந்தோட்டம் என்று அழைக்கப்படும் காட்டுப்பகுதியான காந்தாரா மீது ஒரு கண். அங்கே இருக்கும் இயற்கை வளங்கள் அப்படி. அதை கைப்பற்ற படையுடன் செல்லும் அரசனை, தங்கள் தெய்வத்தின் துணையுடன் தடுத்து நிறுத்துகிறார்கள் காந்தாரா பழங்குடியின மக்கள். அதிலிருந்து அங்கே செல்ல மற்றவர்கள் பயப்படுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு பின் தோற்றுப்போன ராஜாவின் பேரன் காந்தாராவை கைப்பற்றி அழிக்க நினைக்கிறான். அங்கே இருக்கும் தெய்வசக்தியை தங்கள் பக்கம் கொண்டு வர அரசு குடும்பம் முயற்சிக்கிறது. இதை காந்தாரா மக்கள் கூட்டத்தின் தலைவனான ஹீரோ ரிஷப்ஷெட்டி எப்படி தடுக்கிறார். கை விட்டுப்போன தெய்வ சக்தியை எப்படி மீட்டு எடுக்கிறார் என்பது இந்த பாகத்தில் சொல்லப்படும் கதை.

காந்தாரா முதல்பாகத்தில் குல தெய்வ மகிமை, பஞ்சுர்லி தெய்வ வழிபாடு, வராஹமூர்த்தியின் ஆற்றல், பரிவார தேவதையான குளிகாவின் கோபம், சமூக ஏற்றத்தாழ்வுகள், சண்டை சச்சரவுகளை ஆகியவற்றையும், கர்நாடகாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மக்களின் வாழ்வியல், வழிபாட்டு முறையுடன் இணைந்து காண்பித்து இருப்பார் இயக்குனர். இதில் அதற்கு முந்தைய கதையை சொல்கிறார். ராஜாவுக்கும், பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட பிரச்னை, போர் பற்றி விவரிக்கிறார். இதிலும் குளிகா தெய்வ வழிபாடு, குளிகா ஆக்ரோசம் இருந்தாலும் ஒரு கட்டத்தில் சிவன், சாவுண்டி போன்ற தெய்வங்களின் ஆற்றல், மகிமையும் சொல்கிறார். தெய்வத்தின் சக்தியை கட்டுப்படுத்த மாந்த்ரீகம் செய்யும் ஒரு கூட்டம், அரச குடும்பத்தின் பழிவாங்கும் உணர்ச்சியையும், பாதிக்கப்படும் மக்கள் எப்படி கிளர்ந்து எழுகிறார்கள் என்பதையும் ஆக்ஷன், எமோசன், கடவுள் பக்தி கலந்து பிரமாண்ட கமர்ஷியல் படமாக தந்து இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

ஹீரோ ரிஷப் ஷெட்டியின் நடிப்பு, சண்டை, டான்ஸ், குறிப்பாக தெய்வ சக்தியால் அவர் மாறுவது ஆகியவை படத்தின் பிளஸ். இளவரசி ருக்மணிவசந்த்துடன் காதல் காட்சியும் இருக்கிறது. குறிப்பாக, குளிகா தெய்வும் உடலுக்குள் வந்தவுடன் அவர் ஆடுகிற ஆட்டம், கோபம், கிளைமாக்சில் ஈஸ்வரன் அருளால் அவர் செய்கிற போர், அரண்மனை ஏரியாவில் தேர் சண்டை ஆகியவை ஹைலைட்டாக இருக்கிறது.

இளவரசியாக வரும் ருக்மணி ஆரம்பத்தில் சாந்தமாக இருந்தாலும் கிளைமாக்சில் வில்லியாக மாறி, சண்டைபோடுவது செம. மன்னராக வரும் குல்சன் தேவய்யா நடிப்பை பாராட்டலாம். அவரின் பேச்சு, வில்லத்தனம் , உடல்மொழி படத்துக்கு பெரிய பிளஸ். தெய்வசக்தியை கட்டுப்படுத்தவரும் ஒரு கூட்டத்தின் தலைவனாக வருகிறார் சம்பத் ராம். அவரின் உடல்மொழி, கெட்டப் பயப்பட வைக்கிறது. அந்த கூட்டத்தின் செயல்பாடுகள், அவர் நடக்கும் விதம் மிரட்சி.

காந்தாரா என சொல்லப்படும் காட்டுப்பகுதி, மன்னர் வசிக்கும் அரண்மனை, அதன் வீதிகள், துறைமுகம், கோட்டை, குகை, போர்க்கள காட்சிகள், அதிரடி கிளைமாக்ஸ் என அனைத்தையும் அவ்வளவு அழகாக காண்பிக்கிறது அரவிந்த்காஷ்யப் கேமரா.  தரணியின் ஆர்ட் வொர்க்கிற்கு தேசியவிருது கிடைக்கும். அவ்வளவு நேரத்தியாக நகரை, பழங்குடி மக்கள் வாழ்விடங்களை காண்பித்துள்ளார். அஜனீஸ் இசையும், பின்னணி இசையும் கதையை இன்னும் வலுவாக்குகிறது. கிராபிக்ஸ் பற்றி கேட்கவே வேண்டாம். புலி, தேவாங்கு, ராட்சத குரங்கு தொடங்கி, அரண்மனை பிரமாண்டம், கும்பாபிஷேக கூட்டம், பதற வைக்கும் சண்டை, போர் காட்சிகளில் அந்த உழைப்பு தெரிகிறது. சண்டைசீ்ன்களும் செம.

ஆனாலும் படத்தின் முதற்பாதி போராடிக்கிறது. என்ன சொல்ல வருகிறார்கள், கதை எங்கே செல்கிறது. ஒன்றுமே புரியலையே என்ற குழப்பம் ஏற்படுகிறது. கிளைக்கதைகள், கனவு, கடவுள் பற்றி பின்னணியில் தெளிவு இல்லை. காமெடி என்ற பெயரில் பல இடங்களில் கடுப்பு. இப்படி பல மைனஸ் இருந்தாலும் இடைவேளைக்குபி்ன படம் வேகமெடுகிறது. அரைமணி நேர கிளைமாக்ஸ் ஜெட் வேகம். படம் முழுக்க அவ்வளவு விஷூவல் ட்ரீட். பல இடங்கள் ஹாலிவுட் படம் மாதிரி இருக்கிறது. கிளைமாக்சில் வழக்கம்போல் கடவுள் நம்பிக்கை, அந்த வராஹ ரூபம் பாடல், தெய்வவழிபாடு என பாசிட்டிவ் ஆக முடித்துவிட்டு, 3ம் பாகத்துக்கும் லீடு கொடுக்கிறார் இயக்குனர். முதற்பாதில் போர், கொஞ்சம் குழப்பம் என சில குறைகள் இருந்தாலும் காந்தாரா சாப்டர் 2வை பல இடங்களில் கை தட்டி ரசிக்கலாம். பல இடங்களில் வியப்புடன் பார்க்கலாம். பல இடங்களில் அட, மிரட்டிட்டாங்க என்று மனமுவந்து ரசிக்கலாம்.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்

Tags :
Advertisement