”இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்.?” - அண்ணாமலை கேள்வி.!
தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தூய்மைப் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக, தலா ₹40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல், கையுறை கூட வழங்கப்படாமல், தூய்மைப் பணியாளர்கள் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கையில், தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், சுமார் 50 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், திமுக அரசு இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், வீண் விளம்பரங்களுக்குச் செலவு செய்து கொண்டிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு வருவதற்கு, இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்? சென்னை ஐஐடி மாணவர்கள், தூய்மைப் பணியை மேற்கொள்ள, ஹோமோசெப் மற்றும் சிப்பாய் ஆகிய இரண்டு ரோபோக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றைப் பயன்பாட்டில் கொண்டு வர ஏன் திமுக அரசு இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தனது தந்தைக்குச் சிலை வைக்க, மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரமும் நிதியும் இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? சமூகநீதி என்று உதட்டளவில் பேசி நாடகமாடும் திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா?
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.