எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டு மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்குவதற்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. கடந்த 31 நாள்களில் 2500-க்கும் கூடுதலான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த முகாம்களின் மூலம் பயனடைந்த மக்களின் விவரங்கள் குறித்து எந்த விவரங்களையும் தமிழக அரசு வெளியிடவில்லை.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் நடந்த முகாம்களில் மொத்தம் 25 லட்சம் பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த 12 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களில் ஒருவருக்குக் கூட இன்று வரை மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் அங்கேயே சரிபார்க்கப்பட்டு, உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளனவா? என்பதையும் உறுதி செய்து தான் பெறப்படுகின்றன.
அத்தகைய சூழலில் மகளிர் உரிமைத் தொகை கோரும் விண்ணப்பங்கள் மீது அதிகபட்சமாக 2 நாள்களில் முடிவெடுக்க முடியும். ஆனால், ஒரு மாதங்களில் பெறப்பட்ட 12 லட்சம் விண்ணப்பங்களில் ஒன்று கூட இன்னும் பரிசீலிக்கப்படவில்லை; விண்ணப்பித்தவர்களில் ஒருவருக்குக் கூட மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்பதிலிருந்தே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எத்தகைய ஏமாற்று வேலை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அது ஓர் ஏமாற்றுத் திட்டம் என்று கூறி வருகிறேன். அது இப்போது உண்மையாகி வருகிறது. இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.