இட்லி கடை படம் எப்படி இருக்குது..? - சுடச்சுட விமர்சனம்..!
தனுஷ், இயக்கி நடித்து இருக்கும் படம் இட்லி கடை. தலைப்புக்கு ஏற்ப ஒரு சின்ன இட்லி கடையை சுற்றியே கதை நடக்கிறது. தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் ஒரு ஓட்டல் நடத்துகிறார் ராஜ்கிரண். அந்த ஓட்டலின் இட்லி சுவையை ஊரே கொண்டாடுகிறது. காரணம், காலையில் 3 மணிக்கு எழுந்து,சுத்தபத்தமாகி, சாமி கும்பிட்டுவிட்டு கடையை திறந்து தானே ஆட்டுக்கலில் மாவு ஆட்டி, பக்குவமாக சாம்பார் வைத்து இட்லி பரிமாறுகிறார் ராஜ்கிரண். அவர் தொழில் பக்தி அப்படி.
அவர் மகனான தனுஷ் வளர்ந்தவுடன் செப் ஆகி, பாங்காக்கில் வேலை பார்க்கிறார். அவர் வேலை பார்க்கும் தொழிலதிபர் மகள் ஷாலிணி பாண்டே, தனுசை காதலிக்க, அவர் அண்ணன் அருண்விஜய் எதிர்க்க, அதையும் மீறி தனுஷ், ஷாலிணிபாண்டே திருமணம் நடக்க இருக்கிறது. அதற்குள் சூழ்நிலை காரணமாக சொந்த ஊர் வருகிறார் தனுஷ். அப்பாவின் ஓட்டலை எடுத்து நடத்துகிறார். அதில் ஏகப்பட்ட பிரச்னைகள். அதற்குள் தங்கை திருமணம் நின்றதால் பாங்காக்கில் இருந்து வில்லன் அருண்விஜயும் வந்து தனுசுக்கு குடைச்சல் கொடுக்க, தடைகளை மீறி அப்பா மாதிரி இட்லிகடை நடத்தினாரா தனுஷ். அவருக்கும், ஊரில் இருக்கும் நித்யாமேனனுக்கும் திருமணம் நடந்ததா? அருண்விஜய் அன் கோ திருந்தினார்களா என்பது இட்லிகடை படத்தின் கரு.
நடிகராக பல இடங்களில் தனி முத்திரை பதித்து இருக்கிறார் தனுஷ். ஆரம்பத்தில் சில சீன்களில் கல்லுாரி மாணவராக வருகிறார். பின்னர், பாங்காக் ஓட்டலில் கோட், சூட் என ரிச் ஆக இருக்கிறார். ஊருக்கு வந்தவுடன் நெற்றியில் பட்டை, வேட்டி, சட்டை, துண்டு என கிராமத்தானாக மாறி நல்ல நடிப்பை த ருகிறார். அப்பா மறைவால், அம்மாவின் நிலையால் அவர் கலங்குகிற சீன் அருமை. ஓட்டலை நடத்துவதா? விற்பதா என தவிக்கிற சீன், அப்பா கை பக்குவம் வராமல் அவர் ஏங்குற சீன் இன்னும் அருமை. இதற்கிடையில், நித்யாமேனன் காதல் போர்ஷனிலும் கலக்குகிறார். அவருக்கும் அருண்விஜய்க்குமான மோதல், பாக்சிங் சீன், சண்டைகாட்சிகள் விறுவிறு. கிளைமாக்சில் அவரின் பெருந்தன்மை, காந்திஜி அகிம்சை பார்முலா, டான்ஸ் ஆகியவையும் மனதில் நிற்கிறது. அந்த கன்னுக்குட்டி சம்பந்தபட்ட சீன்கள், அப்பா நினைவுகள் வேற லெவல்
அவர் இட்லி அரைக்கிற காட்சிகள் கலகலப்பு. ஆனாலும், இடைவேளைக்குபின் அவர் கேரக்டர், காட்சிகளில் இன்னும் பூஸ்ட் இருந்து இருக்கலாம். அவர் அடிவாங்குவது, அனுசரித்து போவது மைனஸ் ஆக தெரிகிறது.
அப்பாவாக, இட்லி கடைக்காரராக, தொழில் பக்தி கொண்டவராக வாழ்ந்து இருக்கிறார் ராஜ்கிரண். அவரின் நடை, அந்த மென்மையான டயலாக், பாசிட்டிவ் சிந்தனை ஆகியவை அந்த கேரக்டரை மறக்கமுடியாமல் செய்கிறது. அவர் மனைவியாக வரும் கீதாகைலாசமும் உருக்கமான நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஹீரோயினாக வரும் நித்யாமேனன் தேனி கிராமத்து பெண்ணாக நடை, உடை, குறும்புத்தனமான, கொந்தளிப்பான பேச்சில் ‘நான் தேசிய விருது வாங்கிய நடிகை என நிரூபித்து இருக்கிறார். வில்லனாக வரும் அருண்விஜய் நடிப்பு, கேரக்டரும் ஓகே. அவரின் பாக்சிங் சீன், சண்டைகாட்சிகள், தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் தவிக்கிற சீன் சிறப்பு. கடைசியில் அவருக்கு கிடைக்கும் அந்த தண்டனை செம.
ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை, அனைத்து பாடல்களும் படத்துக்கு பலம், என்ன சுகம், என் பாட்டன் பாடல்கள் உயிரோட்டமாக இருக்கிறது. கிரண்வுகவுசிக் ஒளிப்பதிவு தேனி கிராமத்தை அழகாக காண்பிக்கிறது. முதலில் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்து, பின்னர் வேகமாக ஓடுகிறது கதை. ஆனால், இடைவேளைக்குபின் கொஞ்சம் ஸ்லோ ஆகிறது. தனுஷ் சம்பந்தப்பட்ட சண்டை, ஆஸ்பிட்டல், மன்னிப்பு சீன்கள் செயற்கைதனமாக இருக்கிறது.
பரோட்டோ கடை வைத்து இருக்கும் சமுத்திரக்கனி, போலீசாக வரும் பார்த்திபனை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். தனுசுக்கு உதவி செய்யும் இளவரசும் படத்துக்கு பலம். குறிப்பாக, வெளிநாட்டில் வந்தவுடன் தன்னை அம்மாவால் கூட கண்டுபிடிக்க முடியலையே என்று கலங்கும் சீன்கள் பீலீிங். சத்யராஜ் நடிப்பில் நிறைய செயற்கைதனம். இடைவேளைக்குபின் இன்னும் கொஞ்சம் வொர்க் பண்ணியிருந்தால், கமர்ஷியலாக யோசித்து இருந்தால், படம் இன்னும் பெரிய ஹிட் ஆகி இருக்கும். பாங்காக் காட்சிகள், அருண்விஜய், சத்யராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஏனோ செயற்கை தனம் அதிகம்.
கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாமோ என தோன்றுகிறது. ஆனாலும், படத்தின் உயிர்நாடி இட்லி, இட்லிகடை சம்பந்தப்பட்ட சீன்கள்தான். இதுவரை யாரும் தொட்டிராத அந்த பகுதியை அழுத்தமாக, நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் தனுஷ். குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம், ஊர் பாசம், தொழில் நேர்த்தி சம்பந்தப்பட்ட டயலாக்குகள், அதற்கான காட்சிகளை ரசிக்க முடிகிறது.
நம்முடைய சின்ன வயது நினைவுகள், நாம் சாப்பிட்ட ஓட்டல், அந்த கடைக்காரர்கள், அந்த உணவின் ருசி, நம் ஊர், கடைவீதி ஆகியவை இட்லிகடையை பார்க்கும்போது நினைவுக்கு வருவது படத்தின் பலம்
வழக்கமாக பெரிய ஹீரோ நடிக்கும் படங்களி்ல் ஹீரோயிசம், பில்டப் காட்சிகள் அதிகம் இருக்கும். இதில் எதார்த்தமாக கதை சொல்லி தானே பல இடங்களில் அடக்கி வாசித்து இருக்கிறார் தனுஷ். படத்தில் வரும் பாசிட்டிவ் சிந்தனை, மகாத்மா காந்தி தத்துவம், மன்னிக்கிற நிலைப்பாடு ஆகியவை நல்ல விஷயங்கள். ஆயுதபூஜை லீவில் குடும்பத்துடன் பார்க்கலாம்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்