மசூதியில் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிடுவது எப்படி குற்றமாகும்? - உச்சநீதிமன்றம்
மசூதியில் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிடுவது எப்படி குற்றமாகும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மசூதிக்குள் நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் தங்கள் மீது பதியப்பட்ட எஃப்ஐஆர் மற்றும் குற்றவியல் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு நபர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவதால் பிற மத உணர்வுகள் காயப்படுவதாக கூறுவதை புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்தச் சம்பவத்தால் எவ்வித மோதலோ அல்லது பொதுவெளியில் அசாதாரண சூழலோ ஏற்பட்டதற்கான குற்றச்சாட்டுகளும் இல்லை. மசூதிக்குள் நுழைந்து இந்தச் செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவர் மீதும் புகாரளித்த நபரே அவர்களை நேரில் பார்த்தில்லை என கூறியுள்ளார். எனவே குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் இந்தச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லாமல் அவர்களிடம் விசாரணையை தொடர்வது சட்டம் மற்றும் நீதி நடைமுறைக்கு தவறான முன்னுதாரணமாகும். எனவே, அவர்கள் மீதான குற்றவியல் வழக்கு மற்றும் விசாரணை ரத்து செய்யப்படுகிறது' என குறிப்பிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. ஹைதர் அலி என்பவர் தாக்கல் செய்த இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஒரு மதம் சார்ந்த குறிப்பிட்ட வார்த்தையையோ அல்லது பெயரையோ முழக்கமிடுவது எவ்வாறு கிரிமினல் குற்றமாகும்? எனவும் மசூதிக்குள் நுழைந்ததாக கூறப்படும் நபர்களை எவ்வாறு கண்டறிந்தீர்கள்? சிசிடிவி உதவியுடன் அவர்களை கண்டறிந்ததாக கூறுகிறீர்கள். அப்படியென்றால் அவர்களை கண்டுபிடித்தது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 503-இன்கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் பிரிவு, 447-இன்கீழ் குற்றவியல் அத்துமீறல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது எனவும் தெரிவித்தனர்.
இதன் பின்னர், இந்த மனுவின் நகலை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு வழங்குமாறு கூறிய நீதிபதிகள் இதுதொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.