“கட்டி முடிக்காத அயோத்தி ராமர் கோயிலுக்கு எப்படி சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடத்த முடியும்?” - சங்கரமட தலைவர்கள் கேள்வி!
முழுதாகக் கட்டி முடிக்காத அயோத்தி ராமர் கோயிலுக்கு எப்படி சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடத்த முடியும் என ஆதி சங்கராச்சாரியார் உருவாக்கிய 4 பீடங்களின் தலைமைகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் காங்கிரஸ் பங்கேற்காது என ஏற்கனவே தெரிவித்துவிட்டது. அதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும் இந்த நிகழ்வுக்கான அழைப்பை நிராகரித்துள்ளார். மதத்தின் மூலம் பாஜக அரசியல் லாபங்களை ஈட்ட முயல்கிறது என இரு கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அரசியல் பலன்களுக்காக கட்டி முடிக்காத கோயிலை தேர்தல் நேரத்தில் திறப்பதாக பாஜக மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கோயில் நிகழ்ச்சி முழுக்க முழுக்க வேதத்தின் வழிகாட்டுதலின்படி மட்டுமே நடக்க வேண்டும் என சங்கராச்சாரியார்களும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கான அழைப்பை ஆதி சங்கராச்சாரியார் உருவாக்கிய 4 பீடங்களின் தலைமைகளும் நிராகரித்துள்ளனர். முழுதாகக் கட்டி முடிக்காத கோயிலுக்குள் எப்படி சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடத்த முடியும் எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த தொடர் சர்ச்சைகளுக்கு ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் பதில் அளித்துள்ளார். அதில், 'காங்கிரஸ் கட்சியினர் ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதற்கு சாக்கு சொல்லிகொண்டிருக்கிறார்கள்' எனக் கூறியுள்ளார்.
மேலும், அனைத்தும் வேதங்களின்படியே நடந்துவருகின்றன. திறப்பு விழாவிற்குத் தேவையான அனைத்தும் கோயிலுக்குள் தயாராக உள்ளன. கோயில் இன்னும் முழுதாகக் கட்டிமுடிக்கப்படவில்லை எனக் கூறுவது தவறு' எனத் தெரிவித்துள்ளார். நான்கு சங்கராச்சாரியார்களும் அழைப்பைப் புறக்கணித்தது குறித்து பேசும்போது, ' அவர்களின் எண்ணங்கள் மற்றும் பார்வை குறித்து கேள்வி எழுப்ப முடியாது' எனவும் தெரிவித்துள்ளார்.