“இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள்?” - எடப்பாடி பழனிசாமி கேள்வி!
இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து அதிமுக சார்பில் கஸ்பாபேட்டையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று வாக்காளர்கள் மத்தியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
“அதிமுக வேட்பாளர் அசோக்குமார் படித்தவர். ஏழைகளுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். இரு தலைவர்கள் 30 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி வழங்கினார்கள். மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்ற கட்சி அதிமுக. எந்த இடத்தில் மக்களை சந்தித்தாலும் திமுகவை எப்போது வீட்டுக்கு அனுப்பி விட்டு அதிமுக ஆட்சி மலரும் என்று கேட்கிறார்கள்.
அதிமுகவை வலுப்படுத்த 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டை காக்க முடியவில்லை. ஆனால் இந்தியாவை காக்க ஸ்டாலின் வருகிறார் என்று கூறுகிறார்கள். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள். மக்கள் மத்தியில் திமுக ஆட்சி மீது வெறுப்பு உள்ளது. இதை மறைக்க இந்திய கூட்டணி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் ஸ்டாலின்.
இந்திய கூட்டணியில் ஒருமித்த கருத்து தேர்தலில் போட்டியின் போதே இல்லை. அப்போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்கப்பட்ட போகிறார்கள். ஆந்திரா, ஓடிசா, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் பல கட்சிகள் தேசிய அளவில் பிரதமரை முன்னிறுத்தாமல் தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு உண்டு. இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள்?
சென்னிமலை பகுதியில் நெசவு தொழில் நலிவடைந்து விட்டது. அதிமுக ஆட்சியில் மானியம் வழங்கப்பட்டது. விலைவாசி உயர்வு, ஆனால் வருமானம் இல்லை. மக்கள் திண்டாடும் நிலை உள்ளது. மளிகை பொருட்கள் 40% உயர்வு. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு இந்த தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் 100 வேலை நாள் திட்டம் ஊதியம் உயர்த்தவில்லை. வீட்டு வரி உயர்வு, கடை வரி உயர்வினால் மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் என 7 லட்சம் பேருக்கு உணவளித்த அதிமுக அரசு. 5 லட்சம் முதியோர்கு சுமார் 90% பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது திமுக அரசு முதியோர் உதவித்தொகை நிறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு ஸ்மார்ட் சிட்டி, அரசு பல்நோக்கு மருத்துவமனை, மேம்பாலம், புறவழிச்சாலை என பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிக்க 7.5% உள் ஒதுக்கீடு மூலம் 2400 மாணவர்கள் மருத்துவம் படித்து வருகிறார்கள். இது தான் அதிமுக ஆட்சியின் சாதனை. தமிழர் உரிமை மீட்போம் தமிழர்கள் உரிமை காப்போம்”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.