இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி..? - ஒரு மினி ரிவியூவ்...!
தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமைகளில் நிறைந்து காணப்படும் இடங்கள் இரண்டு. ஒன்று கோயில். மற்றொன்று திரையரங்குகள். வார விடுமுறையை குறிவைத்து பெரும்பாலான படங்கள் வெள்ளிகிழமையில் தான் வெளியிடப்படுகின்றன, அந்த வகையில் இந்த வாரம் துல்கர் சல்மானின் காந்தா, பிரபுசாலமனின் கும்கி 2, ஆனந்த்ராஜின் மதராஸ் மாபியா கம்பெனி, லிங்காவின் தாவுத் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் சேரனின் ஆட்டோகிராப் படம் ரீரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
காந்தா
மலையாள நடிகர் துல்கர் சல்மான், பாக்கியஸ்ரீ போஸ், சமுத்திரக்கனி ஆகியீர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் காந்தா. குருவுக்கும் சிஷ்யனுக்குமான ஈகோ மோதல் எதில் போய் முடிகிறது என்ற சிம்பிள் கருதான். அதை, 1950களின் பேக்கிரவுண்ட், அந்த கால சினிமா ஸ்டூடியோ, செட், ஹீரோயின், போலீஸ் விசாரணை என விரிவாக சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர் செல்வமணிசெல்வராஜ். கதைப்படி சினிமா சீனியர் இயக்குனராக சமுத்திரக்கனி வருகிறார். அவரால் கண்டெடுக்கப்பட்டு, பெரிய ஹீரோவாக இருக்கிறார் துல்கர்சல்மான். இருவருக்கும் இடையேயான ஈகோ மோதலால் பிரிகிறார்கள். பின்னர், ஒன்று சேர்ந்து காந்தா என்ற படத்தை தொடங்குகிறார்கள். என் இஷ்டப்படிதான் சீன்கள் இருக்கும், கதை இப்படிதான் வரணும் என்கிறார் ஹீரோ. நான்தான் டைரக்டர். அவனை உருவாக்கியவன். எதையும் மாற்றக்கூடாது என்கிறார் குருவான சமுத்திரக்கனி.இவர்களுக்கு இடையில் புதுமுக ஹீரோயினாக அந்த படத்தில் நடிக்கும் பாக்யஸ்ரீ படாதபாடு படுகிறார்.

ஒரு கட்டத்தில் ஹீரோ துல்கரை அவர் காதலிக்கிறார். இருவரும் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்ய இருக்கும் நிலையில், ஒரு நாள் இரவில் ஸ்டூடியோவில் ஒரு கொலை நடக்கிறது. கொலையானது யார்? கொலைக்கு காரணம் என்ன? கொலை செய்தது யார்? அதை போலீஸ் இன்ஸ்பெக்டரான ராணா கண்டுபிடித்தாரா? குரு, சிஷ்யன் மோதல் என்ன ஆனது என்பது காந்தா கதை. டி.கே.மகாதேவன் என்ற சினிமா ஹீரோவாக நடித்து இருக்கும் துல்கருக்கு ஏகப்பட்ட விருதுகள் நிச்சயம். ஒவ்வொரு சீனிலும் ரசித்து, கைதட்டல் வாங்கும் அளவுக்கு நடித்து இருக்கிறார். அவருக்கும் சமுத்திரக்கனிக்குமான ஈகோ மோதல் காட்சிகள், படப்பிடிப்புதளத்தில் நடிக்கும் சண்டைகள் செம. காதல் காட்சியிலும், போலீஸ் விசாரணை காட்சியிலும் துல்கர் ராக்கிங். சீனியர் இயக்குனராக, துல்கருடன் மோதுபவராக நடிப்பில் மிரட்டி இருக்கிறார் சமுத்திரக்கனி. கிளைமாக்சில் அவர் சொல்லும் விஷயங்கள் நச். இந்த இரண்டுபேருக்கு நடிப்பில் புதுமுக வரவான பாக்யஸ்ரீ, ஹீரோயினாக முத்திரை பதித்து இருக்கிறார். அவரின் முகபாவம், நடிப்பு, எமோஷனல் படத்துக்கு பிளஸ். கொலையை கண்டுபிடிப்பவராக ராணாவும் மனதில் நிற்கிறார்.
இவர்களை தவிர, உதவி இயக்குனராக வரும் நாகேஷ் பேரன் பிஜேஷ்க்கு அப்பாவிதனமான நடிப்பில் கலக்கியிருக்கிறார். படத்துக்கு ஜானுசந்தர் இசை, டேனியின் ஒளிப்பதிவு பலம். 1950 கால கட்டத்துக்கு அழைத்து செல்கிறது ராமலிங்கம் செட் வொர்க். முதற்பாதியில் ஈகோ, மோதல், சினிமா படப்பிடிப்பு என செல்லும் கதை, பிற்பாதியில் கொலை வழக்காக மாறுகிறது. அதில் பல திருப்பங்கள். படத்தின் நீளம் அதிகம். சில காட்சிகள் சலிப்பு, வசனங்கள் அழுத்தமானவை என சில குறைகள் இருந்தாலும், மாறுபட்ட சினிமாவை, அந்த கால சினிமாவை பார்க்க விரும்புகிறவர்களுக்கு காந்தா விருந்து. காந்தா, மக்களை திரையரங்குகளை நோக்கி இழுக்கும் காந்தம்.
மதராஸ் மாபியா கம்பெனி
ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் ஆனந்தராஜ் ஹீரோவாக நடித்து இருக்கும் படம். சென்னையில் தாதாவாக இருக்கும் அவரை கண்ட்ரோலுக்கு கொண்டு வர நினைக்கிறது போலீஸ் தலைமை. அதற்கு போலீஸ் அதிகாரியான பிக்பாஸ் சம்யுக்தாவை நியமிக்கிறது. எந்த வழக்கிலும் சிக்கலாமல், பிரபல தாதாவாக வரும் ஆனந்தராஜை அவர் கைது செய்தாரா? அவர் கம்பெனியில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தாரா என்பது கதை.

காமெடி கலந்த ஆக் சன் படம் என்று சொல்லலாம். ஆனந்தராஜ், முனிஸ்காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ஓரளவு சிரிப்பு. ஆக் சன் காட்சிகளில் ஓரளவு நன்றாக நடித்து இருக்கிறார் சம்யுக்தா. ஆனாலும், நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனந்த்ராஜ் காமெடி கலந்த வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்து இருக்கிறார். அவரின் மனைவியாக வரும் தீபாவும், இன்னொரு மனைவியாக வரும் லயாவும் தங்களுக்கான சீன்களில் தனித்துவம் காண்பித்து இருக்கிறார். தாதாயிசம், சண்டை, சேசிங் என செல்லும் கதையில் ஆங்காங்கே காமெடி இருப்பது ஆறுதல். ஆந்திராவில் நடக்கும் கிளைமாக்ஸ். அடுத்து நடக்கும் சில சீன்கள் படத்துக்கு பலம்.
கும்கி 2
பிரபுசாலமான் இயக்கத்தில் மதி, ஷ்ரிதா, அர்ஜூன்தாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கும்கி 2. முந்தைய கும்கி படத்துக்கும், இந்த பாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டிலும் யானை இருக்கிறது, அவ்வளவுதான். முதற்பாகத்தில் கும்கி யானை பற்றி சொல்லியிருப்பார்கள். இதில் நிலா என்ற யானையை சின்ன வயதில் ஹீரோ காப்பாற்றவது, அதன் பாசமாக பழகுவதை முதற்பாதியிலும் அதை தங்கள் வெற்றிக்காக பலி கொடுக்க நினைக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மறுபாதியிலும் சொல்லியிருக்கிறார்கள்.

மதி நடிப்பு ஓகே ரகம். யானை சம்பந்தப்பட்ட சீ்ன்களில் ஓரளவு நடித்து இருக்கிறார். கிளைமாக்சில் உருகி இருக்கிறார். நிலாவாக வரும் யானையில் பாசம், கோபம் மனதில் நிற்கிறது. கொஞ்சம் வில்லத்தனம் கலந்த வேடத்தில் வருகிறார் அர்ஜூன்தாஸ். அவரின் கேரக்டரில் கதையை விறுவிறுப்பாக்குகிறது. ஹீரோ நண்பனாக வரும் ஆண்ட்ரூஸ் வசனங்கள் கொஞ்சம் கலகலப்பு, மற்றபடி வழக்கமான வில்லன், வழக்கமான சண்டை என செல்கிறது.முதற்பாகத்தில் இருந்த பீலிங், நடிப்பு, இசை இதில் மிஸ்சிங்.
தாவுத்
இரண்டு கள்ளக்கடத்தல் டீமுக்கு இடையே நடக்கும் போட்டியில், கால் டாக்சி டிரைவரான ஹீரோ லிங்கா புகுந்து என்ன செய்கிறார். எப்படி சதுரங்கம் ஆடுகிறார் என்பது கதை. அப்பாவிதனமான கேரக்டரில் லிங்கா புகுந்து விளையாடி இருக்கிறார். தாதாக்களாக தீனா, அபிசேக், சரத் ரவி வருகிறார்கள். ஹீரோ நண்பராக சாரா. சின்ன சின்ன சில விஷயங்கள், கிளைமாக்ஸ் ரசிக்க வைக்கிறது. சின்ன பட்ஜெட்டில் உருவான சுமாரான படம்.

ஆட்டோகிராப்
சேரனின் ஆட்டோகிராப் படத்துக்கு அறிமுகம் தேவையில்லை. 21 ஆண்டுகளுக்குபின் புத்தம் புது பொலிவுடன் ரீ ரிலீஸ் ஆகிறது. சேரன் நடிப்பு, மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா ஆகிய 4 ஹீரோயின் சம்பந்தப்பட்ட சீன் கள், பள்ளி கூடம், கேரளா, சினேகா சீன் கள் எவர் கீரின். அந்த கல்யாண காட்சி சொல்லவே வேண்டாம். அதே கை தட்டல், அதே பீலிங், அதே கண்ணீர் என ஆட்டோகிராப் குட்பீல் படம். இதுவரை பார்க்காதவர்கள் பார்த்து ரசிக்கலாம். ஏற்கனவே பார்த்தவர்கள் மீண்டும் பழைய நினைவுகளை அசை போடலாம். ஆட்டோகிராபின் மை இன்னும் காயவில்லை.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சி சுந்தரம்