இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி – ஒரு மினி ரிவ்யூ!
இந்த வாரம் பல்டி, ரைட், அந்த 7 நாட்கள், சரீரம், குற்றம் தவிர், பனை, குஷி உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ..
பல்டி :
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் சாந்தனு, ஷேன்நிகாம், ப்ரீத்தி அஸ்ராணி, செல்வராகவன், அல்போன்ஸ்புத்திரன் உள்ளிட்ட பலர் நடித்த படம் பல்டி. கேரளா பாலக்காடு அருகே வசிக்கும் நண்பர்களான சாந்தனு, ஷேன்நிகாமுக்கு கபடி என்றால் உயிர். அவர்களின் டீம் வரிசையாக வெற்றி பெறுகிறது. வட்டி தொழில் செய்யும் தாதா செல்வராகவன் அணி தோல்வியை தழுவுகிறது. ஆனாலும், பணத்தேவைக்காக செல்வராகவன் அணியில் இணைந்து இருவரும் விளையாடுகிறார்கள். வட்டி தொழில் செய்யும் செல்வராகவனுக்கு அல்போன்ஸ் புத்திரனும், பூர்ணிமா இந்திரஜித்தும் போட்டியாளர்கள். அவர்களுக்கு இடையே ஏகப்பட்ட பிரச்னைகள் வருகிறது.
வட்டி கட்ட முடியாதவர்களை நிர்வாணம் ஆக்கி டார்ச்சர் செய்வது செல்வராகவன் பாணி. பணம் கட்ட முடியாத ஷேன்நிகாம் காதலி ப்ரீத்தி அஸ்ராணியின் அண்ணனையும் அப்படி அவமானப்படுத்துகிறார் செல்வராகவன். அதிலிருந்து பிரச்னை தொடங்குகிறது. இந்த நண்பர்களை கொல்ல நினைக்கிறார் செல்வராகவன். செல்வராகவனின் வட்டி தொழில் போட்டியாளர்களும் சில பாலிடிக்ஸ் பண்ண, சாந்தனு, ஷேன்நிகாம் எப்படி மாறுகிறார்கள் என்பதை கபடி, ஆக்சன் பேக்கிரவுண்ட்டில் சொல்லியிருக்கிறார்.
கபடி, காதல், பைட் சீன்களில் ஷேன் நிகாம் கலக்கியிருக்கிறார். நண்பனாக வரும் சாந்தனுவும் எமோஷனல், ஆக்ஷன், குறிப்பாக கிளைமாக்சில் நல்ல பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். வில்லன்களாக வரும் செல்வராகவனும், அல்போன்ஸ்புத்திரனும் தங்கள் தனித்துவமான நடிப்பால் படத்தை விறுவிறுப்பாக்குகிறார்கள். ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ராணிக்கு நடிக்க அதிகம் வாய்ப்பில்லை என்றாலும் ஜாலக்காரி பாடலில் மனதில் நிற்கிறார். கபடி போட்டி காட்சிகள், ஓட்டல் பைட், லாட்ஜ், கிளைமாக்ஸ் சண்டை நன்றாக உள்ளது. இடைவேளை வரை கதை புரியாத நிலை, இடைவேளைக்குபின் கொஞ்சம் தொய்வு, நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ஆக்ஷனில் மிரட்டுகிறது பல்டி. சாய் அபயங்கரின் இசை படத்துக்கு பலம். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் வந்துள்ள பல்டிதான் இந்த வாரம் டாப் படமாக உள்ளது.
ரைட் :
சென்னை கோவளம் போலீஸ் ஸ்டேஷனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, யாராவது வெளியேறினால் பாம் வெடிக்கும் என, வெளியே இருந்து மிரட்டுகிறான் ஒருவன். அந்த ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்த அருண்பாண்டியன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அக் ஷராரெட்டி. ஏட் மூணாறு ரமேஷ் உள்ளிட்டோர் அந்த சிச்சுவேஷனை எப்படி சமாளிக்கிறார்கள். அப்படி மிரட்டுபவன் யார்? என்ன காரணம்? பாம் வெடித்ததா என்பது ரைட். இந்த படத்தை கரு.சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கி இருக்கிறார்.
போலீஸ் கதைகளில் இது வித்தியாசமானது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியில் இருந்து போலீஸ் ஸ்டேஷனை கட்டுப்பாட்டில் எடுக்கும் வில்லன், அவன் கோரிக்கையை ஏற்று ஸ்டேஷனில் நடக்கும் விசாரணை. காதல், அரசியல் பவர் என பல விஷயங்களை புதுமையாக பேசுகிறது ரைட் கதை. மகனை இழந்து புகார் கொடுக்க வரும் அருண்பாண்டியன் கேரக்டர், போலீஸ் ஸ்டேஷன் நிலவரத்தை சமாளிக்கும் சப் இன்ஸ்பெக்டர் அக் ஷரா ரெட்டி கேரக்டர் ஓகே. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நட்டியும், கிளைமாக்சில் ஒரு டுவிஸ்ட் கொண்டு வந்து நடிப்பில் கலக்குகிறார். இவர்களை தவிர, திருடனாக வரும் தங்கதுரை, கதையை நகர்த்தும் முக்கியமான கேரக்டரில் வரும் வீரம் யுவினா ஆகியோரும் கதைக்கு பிளஸ்.
பாம் வைத்தது யார்? ஏன் வைத்தார் என்று கேள்விக்கான பதில் பரபரப்பாக உள்ளது. ஆனாலும், சீரியஸ் ஆன கதையில் காமெடிதனம் வருவதும், பல இடங்களில் திரைக்கதையில் தொய்வு ஏற்படுவதும் மைனஸ். மந்திரி மகன், அவன் அட்டகாசம், பழிவாங்கமல் போன்றவை பல படங்களில் பார்த்தது. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் காட்சிகள் மட்டும் விறுவிறுப்பாக இருக்கிறது. நட்டி கேரக்டர், அவரின் பாச சீன்கள் டச்சிங். இப்படியெல்லாம் ஒரு ஸ்டேஷனில் நடக்குமா? ஜட்ஜ் ஸ்டேஷனுக்கு வந்து விசாரிப்பாரா? உயர் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று கேள்விகள் எழுந்தாலும், லாஜிக் பார்க்காமல் பார்த்தால் ரைட்டை ரசிக்கலாம்.
அந்த 7 நாட்கள் :
ஒருவர் கண்ணை பார்த்தவுடன் அவர் எப்போது இறப்பார் என்று சொல்லும் சூப்பர் பவர் ஹீரோ அஜித்தேஜ்க்கு கிடைக்கிறது. ஹீரோயின் ஸ்ரீஸ்வேதா கண்ணை பார்க்கும்போது அவர் 7 நாளில் இறந்துவிடுவார் என்று ஹீரோவுக்கு தெரியவர, அடுத்த 7 நாட்களில் என்ன நடக்கிறது என்பது அந்த 7 நாட்கள் கதை. சுந்தர் இயக்கி உள்ளார். முதற்பாதி ஹீரோவின் காதல், அந்த சூப்பர் பவர். அதனால், அவருக்கு ஏற்படும் பிரச்னைகள் என மெதுவாக நகர்கிறது. ஹீரோயின் முடிவு தெரிந்து ஹீரோ தத்தளிக்க படம் சூடுபிடிக்கிறது. அந்த சமயத்தில் ஹீரோயினை நாய் கடிக்க அவருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. அவரை காப்பாற்ற கொடைக்கானலுக்கு போகிறார் ஹீரோ.
அங்கே அவர்களை சிலர் கடத்த முயற்சிக்க, என்ன நடந்தது? ஹீரோயின் உயிர் பிழைத்தாரா என்பது கிளைமாக்ஸ். கொஞ்சம் வித்தியாசமான, பேண்டசி கலந்த காதல் கதை. ஆனாலும், அதற்கான சீரியஸ்தன்மை படத்தில் குறைவு. கடைசி அரை மணி நேர காட்சிகள் மட்டுமே ரசிக்க முடிகிறது. ரேபிஸ் பாதிப்பால் அவதிப்படும் ஹீரோயின் நடிப்பு உருக்கம். பாக்யராஜ், நமோநாராயணா சீன்கள் போராடிக்கிறது. பிளாஷ்பேக் காட்சியில் வரும் தலைவாசல் விஜய் சம்பந்தப்பட்டவை புதிது. வித்தியாசமான கதை. ஆனால், அதை சரியாக சொல்லவில்லை.
குற்றம்தவிர் :
சுகாதாரத்துறை அமைச்சராக பருத்திவீரன் சரவணன், டாக்டர் ஆனந்தபாபு, வில்லன் பாண்டுரங்கன் ஆகியோர் தனி கூட்டணி அமைத்து மருத்துவத்துறையில் ஊழல் செய்து, தவறான முறையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். அந்த திட்டத்திற்கு ஹீரோ ரிஷிரித்விக் அக்கா வினோதினி பலியாகிறார். போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஹீரோ, போலீஸ் போல் துப்பறிந்து தனது அக்கா மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, எப்படி தண்டிக்கிறார் என்பது எம்.கஜேந்திரா இயக்கிய குற்றம் தவிர் கதை.
வில்லன்களின் அட்டகாசம், ஹீரோவின் காதல், மருத்துவத்துறை முறைகேடு, இரண்டு தாதாக்களின் மோதல் என முதற்பாதி நகர்கிறது. பிற்பாதி வில்லன்களை தேடி கண்டுபிடித்து அழிப்பதில் செல்கிறது. காதல், அக்கா பாசம், கோபம், சண்டைக்காட்சிகளில் ரிஷிரித்விக் பெர்பார்ம் பண்ணுகிறார். அக்காவாக வரும் வினோதினி பாசத்தை பொழிகிறார். அவர் மகளாக வரும் சாய் சைந்தவியின் நடிப்பு படத்துக்கு பெரிய படம். அவர் சம்பந்தப்பட்ட பாடல்காட்சி, அவர் மாமாவுக்காக துப்பறியும் சீன் நன்றாக உள்ளது.
இவர்களை தவிர வில்லனாக வரும் ஆனந்த்பாபு, பருத்திவீரன் சரவணன் வில்லத்தனத்தால் சீறுகிறார்கள். பின்னணி இசை, குத்தாட்ட பாடலில் ஸ்ரீகாந்த்தேவா இசை புகுந்து விளையாடி இருக்கிறது. மருத்துவ முகாமில் இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்குமா? மருத்துவதுறையில், காப்பீடு திட்டங்களில் இப்படிப்பட்ட முறைகேடு செய்யப்படுகிறதா? அப்பாவி மக்களின் உயிர், உடல்பாகங்களை வைத்து பணம் சம்பாதிப்பார்களா? என்ற கரு மட்டும் மனதில் நிற்கிறது.
சரீரம் :
பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஹீரோயின் சார்மியை காதலிக்கிறார் ஹீரோ தர்ஷன். காதல் விவகாரம் ஹீரோயின் அவர் மாமா, குடும்பத்துக்கு தெரிய வர, இருவரும் வீட்டை விட்டு மாமல்லபுரம் செல்கிறார்கள். அங்கேயும் ஹீரோயின் மாமா ஆட்கள் துரத்த, இருவரும் ஒரு முக்கியமான முடிவை எடுக்கிறார்கள். அதாவது, திருநங்கைகள் ஆதரவுடன், ஹீரோ பெண்ணாக மாறுகிறார். ஹீரோயின் ஆணாக மாறுகிறார். இதற்காக டாக்டர்கள் உதவியுடன் ட்ரீட்மென்ட் எடுக்க ஆரம்பிக்கிறார்கள். முதற்கட்டமாக இருவரும் உருவ அளவில் எதிர்பாலுக்கு மாறுகிறரா்கள். அடுத்து ஆபரேஷன் செய்ய நினைக்கிறார்கள்.
அப்போது வேலை செய்யும் இடத்தில், குடியிருக்கும் இடத்தில் காதலர்களுக்கு புதுப்புது பிரச்னைகள் வருகிறது. இதற்கிடையில், ஹீரோயின் கர்ப்பம் ஆகிறார். என்ன நடக்கிறது. இருவரும் அப்படி மாறினார்களா? என்பது சரீரம் கிளைமாக்ஸ். காதலுக்காக தங்கள் பாலினத்தை மாற்றுவது என்பது படத்தின் முக்கியமான கரு. ஹீரோ, ஹீரோயின் இருவரும் அந்தகாட்சிகளில் உணர்வுபூர்வமாக நடித்து இருக்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் கலங்க வைக்கிறது. ஆனாலும் இதெல்லாம் தவறு, இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய கூடாது என்று கடைசியில் ஒரு நீதிபதி மூலமாக சொல்ல வைத்து, பாசிட்டிவ் ஆக படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் ஜி.வி.பெருமாள்.
பனை :
வாழையை விட சிறப்பான பலனை தருவது பனை என்பார்கள். அப்படிப்பட்ட பனை மரம் பின்னணியில் சமூக ஏற்றத்தாழ்வுகளை பேசும் படம் பனை. ஹரீஷ், மேக்னா, வடிவுக்கரசி, அனுபமாகுமார் நடித்து இருக்கிறார்கள். எம்.ராஜேந்திரன் வில்லனாக மிரட்டி, படத்தை இயக்கி இருக்கிறார். படித்து இருந்தாலும் பட்டினத்தில் பேப்பர் வியாபாரம், கிராமத்தில் பனை பொருள் வியாபாரம் செய்யும் கேரக்டர் ஹீரோவுக்கு. அவரின் காதல் என்னவாகிறது.
பனையை நம்பி இருக்கும் குடும்பங்களின் பிரச்னைகள், வில்லனின் அட்டகாசம் என பல விஷயங்களை படம் பேசுகிறது. பனை மரம் வைத்து இருந்தாலும், அதன் பலன்களை அனுபவிக்கும் வில்லனின் ஆட்டத்துக்கு ஹீரோ எப்படி முடிவு கட்டுகிறார் என்பது கிளைமாக்ஸ். பனை மரங்கள் நிறைந்த உடன்குடி பகுதியில் கதை நடப்பது சிறப்பு. கிளாமருக்கு ரிஷா குத்துபாடல் இருக்கிறது. கஞ்சா கருப்பு இமான் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். பாட்டியாக வரும் வடிவுக்கரசி நடிப்பு, அவர் முடிவு நெகிழ்ச்சி. மீராலால் இசையில் வைரமுத்து வரிகள் கவனிக்க வைக்கிறது. பனை மரங்கள் காப்பாற்றப்பட வேண்டும், பனை தொழிலை நம்பி இருப்பவர்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற கரு பாராட்டப்பட வேண்டியது.
குஷி :
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த குஷி படம், 25 ஆண்டுகளுக்கு பின் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. 260க்கும் அதிகமான தியேட்டரில் வெளியாகி உள்ள குஷிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜய் ரசிகர்கள், முன்பு அந்த படத்தை பார்த்தவர்கள் இப்போதும் அந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். பல தியேட்டர்களில் கட்டிப்பிடிடா பாடல், மேக்கரீனா, மேகம் கருக்குது பாடல்கள் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு, மீண்டும் ஒளிபரப்பபடுகிறது.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்