கூடுதலாக சாம்பார் தராததால் ஹோட்டல் மேலாளர் கொலை - தந்தை, மகன் கைது!
சென்னையில் உணவு பார்சல் வாங்கும்போது கூடுதல் சாம்பார் தர மறுத்ததால் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மயக்கம் அடைந்து கீழே சுருண்டு விழுந்த சூப்பர்வைசர் அருணை உடன் இருந்த சக ஊழியர்கள் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்த பொழுது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தஞ்சாவூரை சேர்ந்த அருண் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்னை அனகாபுத்தூர் லட்சுமி தெரு பகுதியை சேர்ந்த அருண்குமார் (30) மற்றும் அவருடைய தந்தை சங்கர் (வயது 55) ஆகிய இரண்டு பேரும் மது போதையில் கடைக்கு இட்லி வாங்க வந்துள்ளனர். அப்போது கூடுதலாக சாம்பார் பாக்கெட் கேட்டுள்ளனர்.
ஆனால், மேலாளர் அருண் சாம்பார் தர மறுத்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் மேலாளர் அருணை வாடிக்கையாளர்கள் முன்பே தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த அருண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை சக ஊழியர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்கர் மற்றும் அவரது மகன் அருண்குமார் ஆகியோரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். கூடுதலாக சாம்பார் தராததால் ஓட்டல் மேற்பார்வையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட அருணுக்கு அண்மையில் திருமணம் நடந்தது குறிப்பிடதக்கது.