பாகிஸ்தனை வீழ்த்தி வரலாற்று வெற்றி - #Bangladesh கிரிக்கெட் அணிக்கு ரூ.2.25 கோடி பரிசை வழங்கிய இடைக்கால அரசு!
பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு அந்நாட்டு இடைக்கால அரசு பரிசுத் தொகையை வழங்கியுள்ளது
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது.
கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இதையடுத்து வங்காளதேச அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் வங்காளதேச அணியை பாராட்டியும், பாகிஸ்தானை விமர்சித்தும் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டனர்.
பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த வங்காளதேசம் தற்போது அதே நம்பிக்கையோடு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் இறங்க உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற வங்காள தேச அணிக்கு அந்நாட்டின் இடைக்கால அரசான முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. அதன்படி 3.2 கோடி பங்களாதேசி டாகாவை அறிவித்துள்ளது . இதன் இந்திய மதிப்பு ரூ. 2.25கோடி என்பது குறிப்பிடத்தக்கது.