வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கை - காங்கிரஸ் வரவேற்பு!
வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கையை திமுக அரசு வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப். 19) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
தொடர்ந்து, இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்து பேசினார்.
“தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்றாலும் திறமையான கையாண்டு இருக்கும் நிலையில், வரலாற்று சிறப்புமிக்க நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓர வஞ்சனையுடன் செயல்படுகிறது. இன்னும் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்கவில்லை.
கரும்பு விவசாயிகள் முதல் தவணை கூடுதலாக ரூ.215 கொடுத்துள்ளனர். கொப்பரை தேங்காய் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கோரிக்கை. மீண்டும் விவசாயிகள் கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
விவசாயிகளிடம் எதிர்க்கட்சிகளிடம் ஆலோசிக்காமல் இரவோடு இரவாக மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர். எதற்கு இதனை கொண்டு வந்தார்கள் எதற்கு திரும்பி பெற்றார்கள் என்று அவர்களுக்கும் தெரியவில்லை, நமக்கும் தெரியவில்லை. ஆனால் பாதிப்பு விவசாயிகளுக்கு தான். மத்திய அரசு வேளாண் குடிமக்களை பாதுகாக்க நிதி வழங்க வேண்டும். கள் இறக்குமதி தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.