ரத்தன் டாடா-வின் நாற்காலியில் அமரும் அவரது ஹாஃப் பிரதர் நோயல் டாடா! யார் இவர்?
ரத்தன் டாடா-வின் நாற்காலியில் அமர வைக்கப்பட்டுள்ளார் நோயல் டாடா. யார் இவர்?
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு பின்னர், அவரது பதவிக்கும், அதிகாரத்திற்கும் யார் வாரிசு என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ரத்தன் டாடா-வின் ஹாஃப் பிரதரான 67 வயது நிரம்பிய சகோதரர் நோயல் நவல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாடா சாம்ராஜ்ஜியத்தின் மொத்த ஹோல்டிங் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ்-க்கு தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் தலைமை வகிக்கும் வேளையில், இதில் அதிகப்படியான பங்கு இருப்பை கொண்டிருக்கும் நிறுவனமான டாடா டிரஸ்ட் அமைப்பைத் தான் இதுநாள் வரையில் ரத்தன் டாடா நிர்வாகம் செய்து வந்தார். தற்போது இந்த பதவி தான் நோயல் டாடா வசம் சென்றுள்ளது.
நோயல் டாடா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டாடா குழுமத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். இவர் நவல் டாடா மற்றும் சிமோன் டாடா-வின் மகன், ரத்தன் டாடா மற்றும் ஜிம்மி டாடா-வின் சகோதரர் ஆவார். ரத்தன் டாடா மற்றும் ஜிம்மி டாடா-வின் தாயார் வேறு, நோயல் டாடா தாயார் வேறு. டாடா குழுமத்தின் பல நிறுவனங்களின் இயக்குநராக நோயல் டாடா உள்ளார்.
அவற்றில் ட்ரெண்ட், டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும், டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் உள்ளார். நோயல் டாடா தற்போது சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராபிஜி டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் டிரஸ்டியாகவும் உள்ளார். அவரது கடைசி நிர்வாகப் பொறுப்பு டாடா குழுமத்தின் வர்த்தகம் மற்றும் விநியோகம் பிரிவான டாடா இன்டர்நேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்தது.
அவர் 2010 ஆகஸ்ட் முதல் 2021 நவம்பர் வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். அப்போது நிறுவனத்தின் வருவாயை 500 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகரித்தார். டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு முன்பு நோயல் டாடா ட்ரெண்ட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவர் 1998ல் ஒரு கடையுடன் தொடங்கிய ட்ரெண்ட் நிறுவனத்தை இன்று 700க்கும் மேற்பட்ட கடைகளாக விரிவுபடுத்தியதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். நோயல் டாடா, சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் (UK) பட்டம் பெற்றுள்ளார். INSEAD இல் சர்வதேச நிர்வாக திட்டத்தையும் முடித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகம் நோயல் டாடாவின் மூன்று குழந்தைகளை தனது ஐந்து தொண்டு நிறுவனங்களின் இயக்குநராக நியமித்தது. இது டாடா டிரஸ்ட்களின் தலைமைத்துவத்தில் முக்கியமான மாற்றத்தை குறிக்கிறது. ஏனெனில் பல ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குடும்பத்தின் இளைய உறுப்பினர்கள் இந்த முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ரத்தன் டாடா இறந்ததை அடுத்து அவர் வகித்து வந்த தலைமை பொறுப்பில் அவரது சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டிருக்கிறார்.