சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் தாக்கியதாக அவரது வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
கோவையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது, சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் தாக்கியதாக அவரது வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கர் கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சவுக்கு சங்கர் பதிவு செய்திருந்த காணொலியால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின், புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில், திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, காவல்துறையை சேர்ந்த பெண் காவலர்கள் அடங்கிய குழு, கோவையிலிருந்து சவுக்கு சங்கரை அழைத்து சென்றது. அப்போது பெண் காவலர்கள் தாக்கியதாக சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரை அடிக்கவில்லை என பெண் காவலர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், சவுக்கு சங்கர் கையை ஸ்கேன் செய்ய நீதிபதி ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தார்.