கலிபோர்னியாவில் இந்து கோயில் சேதம் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்!
போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா ( BAPS) என்ற இந்து அமைப்பின் கீழ் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் சுவாமி நாராயணன் கோயில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சினோ ஹில்ஸ் பகுதியில் இருக்கும் சுவாமி நாராயணன் கோயில் வளாகத்தில் சேதம் ஏற்படுத்தியதாக இன்று BAPS அமைப்பு தெரிவித்தது.
இது குறித்து வட அமெரிக்க இந்துக்களின் கூட்டணி அமைப்பு (CoHNA) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஊடகங்களும் கல்வியாளர்களும் இந்து எதிர்ப்பு உணர்வு கற்பனையாக உருவாக்கப்படுகிறது என்று சொல்லுகிறபோது மற்றொரு இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியதோடு கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில்களின் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் கோயில் சேதப்படுத்தப்பட்டதிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் நடந்த நாசவேலை தொடர்பான செய்திகளை நாங்கள் அறிந்தோம். இது போன்ற இழிவான செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.