நினைவு சின்னங்களில் அதிக வருவாய் - தாஜ்மஹால் முதலிடம்!
உலகின் மிகவும் விரும்பப்படும் வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒன்று தாஜ்மஹால். இந்த தாஜ்மஹால் முகலாய கால கட்டடக்கலை அதிசயமாக விளங்கும் 17ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. இது உலகின் மிக அழகான கட்டடங்களில் ஒன்றாகவும், 7 உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
இந்த நிலையில் தாஜ் மஹால் இந்தியாவின் அதிக வருவாய் ஈட்டும் நினைவுச்சின்னத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது தொடர்பாக நேற்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில்,
"தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பார்வையிட பொதுமக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கடந்த 5 ஆண்டுகளாக தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. 5 ஆண்டுகளில் தாஜ்மஹாலைப் பார்வையிட ரூ.297 கோடி நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில் டெல்லியில் உள்ள குதுப்மினார் ரூ.23.80 கோடி நுழைவுக் கட்டணம் ஈட்டி இரண்டாவது இடத்திலும் டெல்லி செங்கோட்டை ரூ.18.08 கோடி வருவாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அதேபோல் 2020-21 நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டியதில் தாஜ்மஹாலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தது. ஒடிஸா மாநிலம் கோனார்க்கில் உள்ள சூரியனார் கோயில் மூன்றாவது இடத்தில் இருந்தது. 2019-20 நிதியாண்டில் ஆக்ரா கோட்டை இரண்டாவது இடத்திலும், குதுப்மினார் மூன்றாவது இடத்திலும் இருந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.